திரைத் துறையில் தனது நடிப்பின் மூலம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தவர் சாய் பல்லவி. ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட நடன நிகழ்ச்சியில் அவர் பங்கு பெற்றார். அந்த மேடையில் தனது நடனத்தின் திறமையை முழுமையாக அவர் வெளி காட்டினார்.
பின்னர் அவருக்கு மலையாளத் திரைப்படமான பிரேமமில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் இதில் நடிப்பதற்கு சாய் பல்லவி மறுப்பு தெரிவித்து இருக்கிறார். மருத்துவம் படித்து வரும் தனக்கு நடிப்பு வேண்டாமே என்றும் அவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம் தெரிவித்திருக்கிறார்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் மலர் கதாபாத்திரத்தில் நடிக்க அது மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும், தமிழ் சினிமாவிலும் சாய் பல்லவி நடித்து வருகிறார். கவர்ச்சி காட்டாமல், தனது நடிப்பு கலையை நிரூபித்தாலே இந்தத் திரையுலகில் பயணத்தை தொடர முடியும் என்பதற்கு சாய் பல்லவியை ஒரு உதாரணம் என்று கூறலாம்.
இப்படியான சூழலில் தற்போது அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகிறது. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் இத்திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.
என்கவுண்டரில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி தான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்து ரபேகா வர்கீஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சாய் பல்லவி. அவரின் அறிமுக வீடியோ மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அண்மையில் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு சாய் பல்லவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில் திடீரென சாய் பல்லவிக்கு எதிராக பலர் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அவர் 2022 ஆம் ஆண்டு அளித்திருந்த பேட்டியில், பாகிஸ்தானில் உள்ள மக்களும் நம் ராணுவத்தினரை பயங்கரவாதிகள் என்று தான் நினைப்பார்கள். நாமும் அவர்களை அப்படித்தான் நினைக்கிறோம். எனக்கு வன்முறை புரியவில்லை என்று கூறியிருந்தார். இந்த வீடியோவை தற்போது இணையத்தில் வைரல் ஆக்கி வரும் பலரும், அவர் இந்திய ராணுவத்திற்கு எதிராக பேசிய உள்ளதாக கூறி வருகின்றனர். இதனால் சாய் பல்லவி புதிய சர்ச்சையில் சிக்கிருக்கிறார்.





