கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தியேட்டர்களில் ரிலீசாகும் படங்கள்தான், அந்த படங்களுக்கு ரசிகர்கள் தரும் வரவேற்பும், ஆதரவும்தான் அந்த படங்களின் வெற்றியை தீர்மானித்தன. அதன்பிறகு டிவி சேனல்கள் பெருகிய நிலையில், சாட்டிலைட் உரிமம் என்ற வகையில் டிவிகளில் படங்களை விற்றதன் மூலம், தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு கணிசமான லாபத்தை பெற்றன.
இந்நிலையில், கடந்த 2020 -21களில், ஓடிடி தளங்கள் உருவாகின. அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், சன்நெக்ஸ்ட், டிஸ்னி ஹாட் ஸ்டார், ஜீ5 என துவக்கத்தில் சொற்பமாக உருவான ஓடிடி தளங்கள் இப்போது ஈசல் போல பெருகிக்கொண்டே இருக்கின்றன. தியேட்டர்களில் படங்களை வெளியிடுவது போன்றே, சாட்டிலைட் உரிமம் என்ற பெயரில் டிவி சேனல்களும், டிஜிட்டல் உரிமம் என்ற பெயரில் ஓடிடி தளங்களுக்கும் புதிய படங்கள் விற்கப்படுகின்றன.
துவக்கத்தில் தங்களது ஓடிடி தளங்களில் நிறைய படங்கள் இருக்க வேண்டும், நிறைய புதிய படங்களையும் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஓடிடி தளங்கள் பல முன்னணி நடிகர்களின் படங்களை, பல கோடிகள் கொடுத்து விலைக்கு வாங்கின. இதனால் சில நேரங்களில் தியேட்டர்களில் படுதோல்வியடைந்த படங்களுக்கு கூட, கணிசமான விலை கொடுத்தன ஓடிடி நிறுவனங்கள்.
இப்படியே சென்ற நிலையில், ஒரு கட்டத்தில், தங்களது ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்ய வாங்கப்படும் படங்களுக்கும், தங்களுக்கு அதனால் கிடைக்கும் வருவாய்க்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதை அறிந்து, ஓடிடி நிறுவனங்கள் அதிர்ந்து போய் விட்டன. இதே நிலையில் நீடித்தால், பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால், முன்பை விட பலமடங்கு விலை குறைத்து, புதிய படங்களை ஓடிடி உரிமம் பெற அந்நிறுவனங்கள் முடிவு செய்துவிட்டன.
அதுமட்டுமின்றி ஓடிடி தளங்கள் அனைத்தும் தங்களுக்குள் சிண்டிகேட் முறையை கொண்டு வந்து, குறிப்பிட்ட நடிகர்கள், இயக்குனர்களின் படத்தை குறிப்பிட்ட விலையில்தான் வாங்குவது என்ற நிலைக்கும் வந்துவிட்டன. அதனால் ஒரு ஓடிடி நிறுவனம் கேட்கும் தொகை, மற்ற ஓடிடி நிறுவனங்களுக்கும் தெரியும். அதனால் மிகப்பெரிய வித்யாசத்தில் படங்களை ஓடிடி தளங்களுக்கு விற்க முடியாது. சில கோடிகள் மட்டுமே முன்பின்பாக விலை பெற முடியும்.
சமீபத்தில் விஜய் நடித்த கோட் படமே, 110 கோடி ரூபாய்க்கும், அஜீத் நடித்து வரும் குட்பேட் அக்லி படமும் 95 கோடி ரூபாய்க்கும் ஓடிடி உரிமம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்பு போல் இருந்திருந்தால் இந்த படங்களின் ஓடிடி உரிமம் 150 கோடிகளுக்கு மேல் போயிருக்கும். இப்போது லேட்டஸ்ட் தகவலாக, ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் 40 நிமிட காட்சிகளை பார்த்த பிறகே, விலையை நிர்ணயித்து சொல்ல முடியும் என்று அமேசான் பிரைம் கண்டிசன் போட்டுள்ளது. இதையறிந்த படத் தயாரிப்பாளர்கள் அரண்டு போயுள்ளனர்.





