குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக இதில் நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதந்தன. வரலாறு காணாத வெள்ளத்தால் மக்கள் தவித்தனர்.
இதில் சாத்தான்குளத்தில் மட்டும் 93 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. இதே போல் ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதிகளிலும், மழை வெளுத்து வாங்கியது. வெள்ளத்தால் உடைமைகளை இழந்த மக்கள் மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டு வருகின்றனர். இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சில பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு 6000 ரபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதேபோல் தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மக்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு பணம் விநியோகிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்ய முன் வந்தார் தளபதி விஜய்.
ஏற்கனவே இவர் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசினை வழங்கினார். அன்று காலை முதல் இரவு வரை ஒரே இடத்தில் நின்று கொண்டு விஜய், பரிசுகளை அளித்தார். இந்த நிலையில் தற்போது அவரது மக்கள் இயக்கம் சார்பாக, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு உதவ முன்வந்தார். இதற்காக விமானம் மூலம் தூத்துக்குடிக்கு கிளம்பிய அவர், அங்கிருந்து பாளையங்கோட்டைக்கு விரைந்தார்.
தொடர்ந்து கே டி சி நகர் மாதா மாளிகையில் நிகழ்ச்சி நடைபெற, 1500 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் அரிசி ரவை சர்க்கரை சேமியா கலந்த மளிகை பொருட்கள் தொகுப்பும், வேஷ்டி சட்டை துண்டு ஆகியவையும் வழங்கப்பட்டன. இதேபோல் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் நிவாரணத் தொகையை விஜய் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது மேடை ஏறிய ஒரு பாட்டியின் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நிவாரண பொருட்களை வாங்குவதற்காக வந்த அந்த பாட்டி, விஜயை பார்த்தும் கடந்து சென்றார். அப்போது விஜய் தன்னை அறிமுகம் செய்து கொள்ள, அவரிடமிருந்து பொருட்களை வாங்கி விடைபெற்றார் பாட்டி. தொடர்ந்து பாட்டியின் பொருட்களை மக்கள் இயக்க நிர்வாகிகள் வாங்கி உதவிய போது அங்கு இருந்த புஸ்ஸி ஆனந்த் கோபப்பட்டார். உடனடியாக இதில் தலையிட்ட தளபதி, அனைவரையும் கூல் செய்தார். இந்த காட்சிகளும் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.





