மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்தவர் ஸ்வேதா மேனன். இவர் கவர்ச்சியான கேரக்டர்களில் அதிகமாக நடித்திருக்கிறார். தமிழிலும் சிநேகிதியே நான் அவன் இல்லை 2 அரவான் துணை முதல்வர் உள்ளிட்ட சில படங்களிலும் ஸ்வேதா மேனன் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் மலையாள சினிமா நடிகர்கள் சங்கத்தின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் சில நடிகைகள், சில இயக்குனர்கள் மற்றும் சில முன்னணி நடிகர்கள் மீது பாலியல் புகார்களை தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதி ஹேமா கமிஷன் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதில் நடிகைகள் கூறிய குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டது.
இந்த விவகாரம், மலையாள சினிமாவில் பூதாகரமாக மாறிய நிலையில் மலையாள நடிகர் சங்கமான அம்மா சங்கமும் இதில் சர்ச்சையில் சிக்கியது. அதனால் சங்கத்தின் தலைவர் நடிகர் மோகன்லால், தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மொத்த நிர்வாக குழுவும் பதவி விலகியது. இதையடுத்து கடந்த 15ம் தேதி அம்மா சங்கத்தின் தலைவர் செயலாளர் உள்ளிட்ட நிர்வாக்குழு தேர்தல் நடந்தது.
அம்மா சங்கத்தில் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என்று நடிகர் மோகன்லால் ஏற்கனவே அறிவித்து விட்டார். இந்த சூழலில் அம்மா சங்க தலைவர் பதவிக்கு நடிகை ஸ்வேதா மேனன், பாட்ஷா பட வில்லன் நடிகர் தேவன் ஆகியோர் போட்டியிட்ட நிலையில் ஸ்வேதா மேனன் அதிக ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார். முதன் முறையாக அம்மா சங்கத்தில் பெண் தலைவராக அவர் உள்ளார்.
இந்நிலையில் அம்மா சங்கத்தின் தலைவர் நடிகை ஸ்வேதா மேனன் கூறியிருப்பதாவது, அம்மா சங்கத்திலிருந்து விலகியவர்கள் மீண்டும் திரும்ப வர வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். கடத்தப்பட்டு பாலியல் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்ட நடிகை சங்கத்திலிருந்து ராஜினாமா செய்தார். அவர் உட்பட ராஜினாமா செய்தவர்கள் அனைவரும் மீண்டும் வந்தால் நான் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அடைவேன்.
ஆனால் சங்கத்தில் இருந்து விலகியவர்களை சேர்ப்பது முக்கிய பணி அல்ல. அதை விட முக்கியமான பணிகள் காத்திருக்கிறது என்றாலும், சென்றவர்கள் திரும்பி வருவதற்கு நடிகர் சங்கத்தின் வாசல் எப்போதும் திறந்தே இருக்கும் என்று சங்கத்தின் தலைவரான நடிகை ஸ்வேதா மேனன் கூறியிருக்கிறார். அவர் கடத்தப்பட்ட நடிகை என்று கூறுவது நடிகை பாவனா தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.





