நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட்டில் மிக பிரபலமான ஒரு நடிகையாக வலம் வருபவர். தமிழில் ஜெயலலிதா கேரக்டரில், தலைவி என்ற படத்தில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானார். சமீபத்தில் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2ம் பாகத்தில் நடித்திருந்தார். ஆனால், படம் வரவேற்பை பெறவில்லை.
அதே போல், இந்தியிலும் அவர் நடித்த பல படங்கள் சமீப காலமாக பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ரூ. 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தேஜஸ் என்ற படம், சமீபத்தில் வெளியானது. இந்த படம் 6 நாட்களில் 6 கோடி ரூபாயை கூட வசூலில் எட்டவில்லை.
இதனால் மனம் விரக்தியடைந்த கங்கனா ரனாவத், சில நாட்களுக்கு முன் அவரே உருக்கமாக பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், சினிமா மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. நாங்கள் வாழ வேண்டும் என்றால் ரசிகர்களாகிய நீங்கள் எல்லாம் நண்பர்கள், குடும்பத்தினருடன் தியேட்டர்களுக்கு சென்று படம் பாருங்கள் என, கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள தேவபூமி துவாரகை நகருக்குச் சென்ற அவர், துவாரகதீசர் கோவிலில் சுவாமி வழிபாட்டில் ஈடுபட்டார். கிருஷ்ணர் கோவிலுக்கு சென்ற அவர் மனமுருகி இறைவழிபாட்டில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரது படங்கள் தோல்வி காண்பதால், மனவிரக்தியடைந்த அவர், ஆன்மிகத்தில் நாட்டம் காட்டி வருகிறார்.
அங்குள்ள செய்தியாளர்கள், வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என கேள்வி எழுப்பிய நிலையில், கடவுள் கிருஷ்ணரின் ஆசிர்வாதம் எனக்கு கிடைத்தால், நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவேன். அயோத்தியில் இருந்த தடைகளை நீக்கியதன் மூலம், 600 ஆண்டுகளாக யாரும் செய்ய முடியாத விஷயத்தை, பாஜக செய்துள்ளது என்றும் பாராட்டியுள்ளார்.
இதன்மூலம் கங்கனா ரனாவத், வரும் மக்களவை தேர்தல் போட்டியிட விரும்புகிறார் என்பதும், பாஜக சார்பில் அவர் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவார் என்பதும் உறுதியாகிறது. ஏனெனில், அயோத்தியில் 600 ஆண்டுகளாக இருந்த தடைகளை பாஜக அரசு நீக்கியதை பாராட்டி பேசி இருக்கிறார். அதனால், விரைவில் கங்கனா ரனாவத் குறித்த அரசியல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உருவாகி உள்ளது.





