கோலிவுட் சினிமாவில் கனல் கண்ணன், சூப்பர் சுப்பராயன், ஸ்டண்ட் செல்வா, பீட்டர் ஹெய்ன், தினேஷ் சுப்பராயன், சில்வா என்று மக்களுக்குப் பரிட்சையமான ஏராளமான சண்டை பயிற்சியாளர்கள் உள்ளனர். இவர்களில், இரட்டை சகோதரர்கள் ஆன அன்பறிவ் பற்றி இங்கு பலருக்கும் தெரிந்திருக்கும். சென்னையில் பிறந்து வளர்ந்த இரட்டை சகோதரர்கள் அன்புமணி, அறிவுமணி இருவரும் சினிமா உலகிற்காக தங்களை அன்பறிவ் என அடையாளப்படுத்திக் கொண்டனர்.

2010 ஆம் ஆண்டு வெளியான நான் மகான் அல்ல திரைப்படத்தின் மூலம் இவர்கள் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தனர். அந்தப் படத்தில் உதவி சண்டை பயிற்சியாளர்களாக இருவரும் பணியாற்றினர். கார்த்தி கதாநாயகனாக நடித்த அந்தத் திரைப்படத்தில், க்ளைமேக்ஸில் நடைபெறும் சண்டைக் காட்சி இன்று வரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.
இதையடுத்து சிறிது காலம் உதவி சண்டை பயிற்சியாளர்களாகவே பணியாற்றி வந்த அன்பறிவ் சகோதரர்கள், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தின் மூலம் சண்டை பயிற்சியாளராக அறிமுகமாகினர். இருப்பினும், சகோதரர்கள் இருவரும் நேர்த்தியாக சண்டைக் காட்சி அமைப்பதில் வல்லவர்கள் என முதல் முதலில் பேசப்பட்டது மெட்ராஸ் திரைப்படத்தில்தான்.

கால்பந்து மைதானத்தில் நடைபெறும் விளையாட்டை போல் நினைத்து, ஹீரோ இறுதியில் சண்டை போடும் காட்சியை அட்டகாசமாக ரசிகர்கள் மனதில் பதிவு செய்தனர் அன்பறிவ் சகோதரர்கள். இதையடுத்து கபாலி, 24, இருமுகன், மாநகரம், சண்டக்கோழி 2 படங்களில் பணியாற்றி பிரபலமானார்கள். தொடர்ந்து தெலுங்கு மலையாளம் கன்னடம் படங்களிலும் அவர்கள் பணியாற்றி வந்தனர்.
அன்பறிவ் சகோதரர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது கே ஜி எஃப் திரைப்படம் தான். அதில் வரும் சண்டைக் காட்சிகளில் அவர்கள் போட்ட உழைப்பை, ஒட்டுமொத்த உலகமும் திரும்பி பார்த்தது. இதைத்தொடர்ந்து கைதி, விக்ரம், சர்பாட்டா பரம்பரை திரைப்படங்களின் மூலம் வரும் புகழின் உச்சிக்கு சென்றனர்.
தற்போது லியோ படத்திற்கும் அன்பறிவ் சகோதரர்களே பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சகோதரர்கள் இருவரும் தற்போது புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், கதாநாயகர்களாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. செப்டம்பர் மாதம் இதற்கான படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.





