தமிழ் சினிமாவில் தனுஷ் ஸ்ருதிஹாசன் நடித்த 3 என்ற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இந்த படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொல வெறி பாடல் எக்கச்சக்கமாக இசை ரசிகர்கள் மத்தியில் டிரண்டிங் ஆனது. தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த அனிருத் இப்போது இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளராக உயர்ந்திருக்கிறார்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் கலைமாவணி விருது வழங்கப்பட்டு வருகிறது. இசை இயல் நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது பல ஆண்டுகளாக இயல் இசை நாடகக் கலையில் சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டி வழங்கப்படுகிறது.
அந்த வகையில் கடந்த 2021 2022 மற்றும் 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்கள் எஸ்ஜே சூர்யா விக்ரம்பிரபு மணிகண்டன் நடிகை சாய் பல்லவி இயக்குனர் லிங்குசாமி சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் பாடகி ஸ்வேதா மோகன் பாடல் ஆசிரியர் விவேகா இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட 90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் பதிவு ஒன்றை செய்திருக்கிறார். அந்த பதிவில் இசையமைப்பாளர் அனிருத் கூறியிருப்பதாவது, மதிப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு வழங்கப்பட்டதை மிகுந்த தாழ்மையுடன் பெருமையுடனும் ஏற்றுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு மதிப்பிற்குரிய முதல்வர் ஸ்டாலின் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயல் இசை நாடக சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனது அனைத்து இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் பாடகர்கள் பாடலாசிரியர்கள் எனது முழு இசைக்குழுவினருக்கு நன்றி.
அதைவிட முக்கியமாக எப்போதும் அன்பும் ஆதரவும் அளித்து வரும் எனது ரசிகர்களுக்கும் இசை ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இந்த விருது என்னுடையது மட்டுமல்ல, நம்முடையது. என்றும் நன்றியுடன் அன்புடன் அனிருத் என்று அந்த பதிவில் இசையமைப்பாளர் அனிருத் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





