தமிழகத்தில் நாளை மறுதினம் 19ம் தேதி (வியாழன்) அன்று லியோ படம் ரிலீஸ் ஆகிறது. 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆறு நாட்களுக்கு ரசிகர் சிறப்பு காட்சி உட்பட 5 காட்சிகளை திரையிட, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், காலை 9 மணி முதல் இரவு 1.30 மணிக்குள் 5 காட்சிகளையும் முடித்துக்கொள்ளவும் அந்த உத்தரவில் அறிவுறுத்தியுள்ளது.
கேரளா, கர்நாடகா மாநிலங்களில் லியோ திரைப்படத்தை, அதிகாலை 4 மணிக்கு திரையிட அந்தந்த மாநில அரசுகள் அனுமதித்துள்ள நிலையில், தமிழகத்திலும் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறி, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து லியோ படத் தயாரிப்பாளர் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் நேற்று வழக்கு தொடுக்கப்பட்டது.
இன்று காலை, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், தினமும் 5 காட்சிகளுக்கு அனுமதியளித்த நிலையில், அதற்கான கால அவகாசத்தை வழங்க வேண்டும். அந்த கால அவகாசம் வழங்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், லியோ படம் இரண்டே முக்கால் மணி நேரம் ஓடக்கூடியது என தெரிந்திருந்தால், இந்த படத்துக்கு 5 காட்சிகள் அனுமதி அளித்திருக்க மாட்டோம். 20 நிமிடங்களுக்கு இடைவௌி விட வேண்டியது எந்த கட்டாயமும் இல்லை. காலை 9 மணிக்கு காட்சியை துவங்க வேண்டும் என்ற அரசின் விதியை மாற்ற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஐந்து காட்சிகளுக்கு அனுமதி என்று அரசு அனுமதித்த நிலையில் தான், அதிகாலை காட்சிக்கு அனுமதி கேட்கப்படுகிறது என்று நீதிபதி அனிதா சுமந்த் கேட்டதற்கு, விடுமுறை நாட்களில், சனி மற்றும் ஞாயிறு தினங்களில்தான் விலக்கு அளிக்கப்படுகிறது. சாதாரண நாட்களில் அல்ல. அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி என காட்சிக்கு அனுமதி தருவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன, எனவும் அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
மேலும் கடந்தமுறை 4 மணி காட்சியின் போது ரசிகர் ஒருவர் உயிரிழந்தார். சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் உள்ளன. எந்த படத்திற்கும் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதிப்பது இல்லை, என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அனிதா சுமந்த், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை. காலை 9 மணிக்கு காட்சிக்கு பதிலாக, 7 மணி காட்சி குறித்து அரசிடம் கோரிக்கை வைக்கலாம். அதை அரசுதான் தீர்மானிக்கும். அதை நாளை மதியத்துக்குள் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.





