தமிழ் சினிமாவில் இப்போதைக்கு நட்சத்திர இசையமைப்பாளராக மிகவும் பிஸியாக இருந்து வருபவர் அனிருத் தான். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு இந்தி என பிறமொழிகளிலும் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. தமிழில் மட்டுமே 15க்கும் மேற்பட்ட படங்கள் இப்போது அவரது கைவசம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
வழக்கமாக நடிகர் சிம்பு நடிக்கும் படங்களுக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைப்பது வழக்கம். அத்துடன் வெற்றிமாறன் இயக்கும் படம் என்றாலே அதில் கண்டிப்பாக ஜீவி பிரகாஷ்குமார்தான் இசையமைப்பாளராக இருப்பார். அது விடுதலை விடுதலை 2 படத்தில் மட்டுமே மாறியிருந்தது. அந்த படங்களுக்கு மட்டும் இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார்.
இந்த சூழலில் இப்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளராக ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம், அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் பல படங்களுக்கு இசையமைத்த வகையில் சரியான சம்பளமும் பேசிய சம்பளமும் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெருக்கமான நட்பின் காரணமாக சம்பளம் குறித்து இயக்குனர் வெற்றிமாறனிடம் கட் அண்ட் ரைட்டாக பேச முடியாமல் ஜீவி பிரகாஷ்குமார் இருந்துள்ளார். இதுபற்றி வெற்றிமாறனும் பெரிதாக அக்கறை காட்டாத நிலையில்தான் சிம்பு நடிக்கும் படத்துக்கு அனிருத் இசையமைக்க கமிட் ஆகியிருக்கிறார்.
ஆனால் அனிருத்தும் இந்த படத்துக்கு ஓகே சொல்லவில்லை. ஏற்கனவே பீப் சாங் விவகாரத்தில் பல ஆண்டுகளாக சிம்பு நடிக்கும் படங்களுக்கு இசையமைப்பதை தவிர்த்து வந்த அனிருத் இந்த படத்துக்கும் உடனே ஓகே சொல்லவில்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு வெற்றிமாறனின் தொடர் அழைப்பால்தான் 15 நாட்களுக்கு முன்புதான் ஒரு வழியாக ஓகே சொல்லி இருக்கிறார்.
ஆனால் இந்த படத்தின் பட்ஜெட் ஏற்கனவே 150 கோடி ரூபாய் என்கிற அளவில் உள்ளது. அனிருத் சம்பளம் ரூ. 20 கோடி என்கின்றனர். சிம்பு வெற்றிமாறனுக்கு அவர் ரூ. 5 கோடி குறைத்தாலும் ரூ. 15 கோடி சம்பளம் கட்டாயம் தர வேண்டும். அதனால் படப்பிடிப்பு செட் செலவுகளை குறைக்கவும் லைவ் லொகேஷன்களில் படப்பிடிப்பை அதிகமாக நடத்தவும் இயக்குனர் வெற்றிமாறன் முடிவு செய்திருக்கிறார். இதற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக நடிகர் சிம்புவும் இயக்குனருக்கு முழு உத்தரவாதம் தந்திருக்கிறார்.





