புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு இராமாவரம் தோட்டம் இல்லம் போல நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தி நகரில் போக் ரோட்டில் உள்ள அன்னை இல்லம் தான் அவர் கடைசி வரை வாழ்ந்து மறைந்த இல்லமாகும். தமிழ் சினிமாவில் அடையாளங்களாக சென்னையில் இருந்த பல கட்டிடங்கள் இப்போது இடிக்கப்பட்டு வணிக வளாகங்களாக குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மிக விரைவில் கோடம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம் இடிக்கப்பட உள்ளது. அதேபோல் முன்னாள் நடிகர் இன்றைய தமிழக முதல்வர் விஜய் சிறுவனாக இருந்த போது வாலிபராக வளர்ந்த போது இருந்த சாலிக்கிராமம் வீடு இடிக்கப்பட்டு அங்கு பல அடுக்குகள் கொண்ட அப்பார்ட்மெண்ட் கட்டப்படுகிறது.
அதேபோல் ஏவிஎம் ஸ்டுடியோவும் இப்போது உருக்குலைந்து போய்விட்டது. இந்த நிலையில் சென்னையில் மற்றொரு அடையாளமான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்த அன்னை இல்லமும் இடிக்கப்படுவதாக ஒரு தகவல் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை தி நகர் போக் சாலையில் மிக பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் அன்னை இல்லத்தில் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடைசி வரை வாழ்ந்தார்.
சிவாஜி கணேசனை நேரில் சந்திக்க வந்த நட்சத்திர நடிகர்களும் அரசியல் தலைவர்களும் அன்னை இல்லத்தில் வயிறார சாப்பிட காலங்கள் இருந்தன. அவர் வீட்டில் சாப்பிடாத திரை நட்சத்திரங்களே இல்லை என்றும் கூட சொல்லலாம். அந்த வீட்டில் தான் சிவாஜியின் மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அவர்கள் இருவருக்கும் சொத்துப் பிரச்சனை இருந்து வருவதால் இப்படி ஒரு தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்த தகவல் உண்மையானது தான். ஆனால் இடிக்கப்படுவது சென்னை தி நகர் போக் ரோட்டில் உள்ள சிவாஜி கணேசன் வாழ்ந்த அன்னை இல்லம் அல்ல. அந்த இல்லம் கட்டுவதற்கு முன்பு அவர் வாழ்ந்த கோபாலபுரத்தில் உள்ள அன்னை இல்லம்தான் இடிக்கப்படுகிறது.
போக் ரோடு அன்னை இல்லம் வீட்டில் பராமரிப்பு பணி நடந்தாலோ அல்லது தனியாக இருக்க வேண்டும் என்று சிவாஜி நினைத்தாலோ தனது பழைய அன்னை இல்லத்துக்கு தான் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகப் பிரிவினையின் படி இந்த பழைய அன்னை இல்லம் சிவாஜியின் மகள்கள் சாந்தி தேன்மொழிக்கு சொந்தமானது. அவர்கள்தான் இங்கு வசித்து வந்தார்கள். இந்த நிலையில் அவர்கள் இந்த வீட்டின் ஒரு பகுதியை ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு கொடுத்து இருக்கிறார்கள். தற்போது அதில் புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.





