சினிமாவில் நடிகர்கள் இயக்குனராவது, இயக்குனர் நடிகராவது காலம் காலமாக நடந்து வருகிறது. பல நடிகர்கள் இயக்குனராக மாறி இருக்கின்றனர். பல இயக்குனர்கள் நடிகர்களாக மாறி ரசிகர்களின் மனம் கவர்ந்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் சிறந்த படைப்பாளியாக இருந்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றவராக உள்ளார்.
சமீபத்தில் மதராஸி படத்தின் பிரமோ நிகழ்ச்சி ஒன்றில் படத்தின் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் பங்கேற்றார். அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகை, இயக்குனராக நீங்கள் ஜெயிச்சுட்டீங்க, உங்களை திரையில் நடிகராக நாங்க பார்க்க வாய்ப்பிருக்கா? என்ற கேள்வியை கேட்டார்.
அதற்கு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் பதில் கூறியதாவது, நாம நடிச்சா யார் பார்க்கிறது? அதுல பெருசா இன்ட்ரஸ்ட் இல்ல. யாரோ ஒரு நண்பர் கிட்ட நான் பேசிட்டு இருக்கும்போது, நீ சிலையா இருக்க ஆசையா, சிற்பியா இருக்க ஆசையா அப்படீன்னு சொன்னாங்க. எனக்கு சிற்பியா இருக்க தான் ஆசை.
சினிமாவை எடுத்துக்கொண்டால் என்ன கஷ்டப்பட்டாலுமே எவ்வளவு ஹார்டு ஒர்க் பண்ணினாலுமே ஹிட் தரும்போது அது ஆர்ட்டிஸ்ட் மீடியாவாக தான் இருக்கு. அதனால் அவங்களுக்கு கிடைக்கிற ஒரு புகழும் வரவேற்பும் ஒரு டெக்னீஷியனுக்கு கிடைக்கறது இல்லே. அது அவசியமும் கிடையாது.
வெளியே போற எடத்துல பயங்கரமா கூட்டம் வரணும். எல்லோரும் மேல வந்து விழணும் என்று அவசியம் இல்லே. நம்ம நேசிச்ச தொழில் நல்லா பண்றோமா? அது கரெக்டா இருக்குதா என்பதுதான் ரொம்ப முக்கியம். ஒரு காட்சியில் இருக்கிற 20 கேரக்டர்ஸ்சுமே நம்ம தான். நம்ம எழுதினதுதான். அந்த லொக்கேஷன் நம்முடையது, அவங்க போட்டிக்கிற டிரெஸ் நம்முடையது.
எல்லாமே நம்ம ஐடியா தான். அவங்க போட்டிருக்கிற மேக்கப் வரைக்கும், ஹேர் வரைக்கும் எல்லாமே நம்ம டிசைட் பண்ணியது. ஒரு பொண்ணு நெத்தியில் வெச்சிருக்கிற பொட்டு வரைக்கும் நம்ம கிரியேசன் என்கிற போது அந்த சுகம் அந்த சந்தோஷம் நடிக்கிறதுல கிடைக்காதுங்கறது என்னோட நம்பிக்கை என்று இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கூறியிருக்கிறார்.





