தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவுக்கே பரிச்சயமானவர் ஏ ஆர் முருகதாஸ். அஜித் குமார் நடித்த தீனா திரைப்படத்தின் மூலம்தான் இவர் இயக்குனராக அறிமுகமானார். முதல் திரைப்படத்தையே ஆக்சன் களத்தில் எடுத்து அசத்தியிருந்தார் முருகதாஸ். சொல்லப் போனால் அஜித்குமாருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படங்களில் தீனாவும் ஒன்று என்று கூறலாம்.
அது மட்டுமல்ல அந்த திரைப்படத்தில்தான் அஜித்குமாரை தல என்று ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்தார்கள். அஜித் குமாரின் இன்ட்ரோ காட்சி முதல் அனைத்தும் இந்த திரைப்படத்தின் பக்காவாக அமைந்திருக்கும். இங்கிருந்துதான் முருகதாஸின் வெற்றிப் பயணம் ஆரம்பித்தது. தனது அடுத்த திரைப்படத்திலேயே விஜயகாந்தை வைத்து ரமணா எனும் அற்புதமான காவியத்தை கொடுத்திருந்தார் முருகதாஸ்.
தொடர்ந்து, சூர்யாவை வைத்து கஜினி மற்றும் ஏழாம் அறிவு கொடுத்து பிரமிக்க வைத்த அவர், கஜினி திரைப்படத்தை பாலிவுட் உலகிற்கு எடுத்துச் சென்றார். அங்கு அமீர் கானை வைத்து கச்சிதமாக அந்த திரைப்படத்தை இயக்கி பலரையும் கவர்ந்தார். பாலிவுட்டிலும் இந்த திரைப்படம் வெற்றி நடை போட, முருகதாஸின் புகழ் இந்திய திரை உலகில் பரவியது.
இப்படியான சூழலில் தொடர் தோல்வி திரைப்படங்களை கொடுத்திருந்த விஜய்க்கும் மிகப்பெரிய திருப்புமுனை ஏ ஆர் முருகதாஸ் மூலம்தான் கிடைத்தது. துப்பாக்கி என்னும் அட்டகாசமான திரைப்படத்தை விஜய்க்கு கொடுத்து பட்டித் தொட்டி எங்கும் கலக்கினார் ஏ ஆர் முருகதாஸ். இப்போது வரை விஜய்யின் துப்பாக்கி திரைப்படத்தை பலரும் பெருமையுடன் பேசி வருவார்கள். அந்த அளவுக்கு கச்சிதமாக அவருக்கு அந்த காவியம் பொருந்தி இருக்கும்.
இந்த நிலையில் ஸ்பைடர் தர்பார் சிக்கந்தர் என அண்மை காலமாக முருகதாசுக்கு தோல்வி திரைப்படங்கள் தொடர்கின்றன. தற்போது சிவகார்த்திகேயனை வைத்து அவர் எடுத்திருக்கும் மதராசி திரைப்படத்தை மிகவும் நம்பி இருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில், பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கும் முருகதாஸ், தான் இயக்கிய திரைப்படங்களில் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்றால் அது நிச்சயம் துப்பாக்கி படமாக தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
துப்பாக்கி திரைப்படத்தை எடுக்கும்போதே இரண்டாம் பாகத்திற்கான யோசனை இருந்ததாகவும், அதனால்தான் விடுமுறை முடிந்து வரும் ராணுவ வீரர் மீண்டும் தனது பணிக்கு செல்வது போன்று காட்சிகளை வைத்திருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த முறை மீண்டும் அவர் ஊருக்கு வரும்போது என்னவெல்லாம் நடக்கிறது என்பதைத்தான் இரண்டாம் பாகத்தில் சொல்ல தான் விருப்பப்பட்டதாகவும், அவருக்கு ஊரில் இருக்கும் போலீஸ் நண்பன் உதவுவது போன்று முதல் பாகத்திலேதான் கூறியிருப்பேன் என்றும் விருப்பத்தை பகிர்ந்து உள்ளார் ஏ ஆர் முருகதாஸ்.





