மலையாள நடிகர் பிருத்விராஜ் தமிழில் கனா கண்டேன் படத்தில் வில்லனாக அறிமுகமானார். தொடர்ந்து நாயகனாக மொழி, நினைத்தாலே இனிக்கும், ராவணன், பாரிஜாதம், சத்தம் போடாதே, வெள்ளித்திரை, அபியும் நானும், கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் பிருத்விராஜ் சிறந்த நடிகராக உள்ளார்.
நடிகர் பிரித்திவிராஜ் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான மலையாள படம் ஆடுஜீவிதம். இந்த படத்தை இயக்குனர் பிளஸ்சி இயக்கி இருந்தார். படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். அரேபிய பாலைவனத்தில் அரபிகளிடம் சிக்கிக் கொண்ட ஒரு மலையான வாலிபர் அவர்களிடம் இருந்து தப்பிக்கும் கதைதான் இந்த ஆடு ஜீவிதம்.
மலையாளம், தமிழ் என பிறமொழிகளில் வெளியான படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. கேரளா அரசின் 9 விருதுகளை வென்றது. மேலும் ஆடுஜீவிதம் படத்தில் இடம்பெற்ற பெரியோனே என்கிற பாடல் சிறந்த பாடல் மற்றும் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான இசை பிரிவில் பின்னணி இசைக்காகவும் ஹாலிவுட் மியூசிக் மீடியா விருதை வென்றது.
இந்நிலையில், ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஹாலிவுட் படத்திற்காக ஏற்கனவே 2 ஆஸ்கர் விருதுகளை வென்றவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். இந்த விருதுகள் மூலம் இந்தியாவின் புகழை அவர் உலக நாடுகள் மத்தியில் உயர்த்தி பிடித்து இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தார். தற்போது மீண்டும் அவர் ஆஸ்கர் போட்டியில் ஆடுஜீவிதம் படம் மூலம் இணைந்துள்ளார். இதன் மூலம் அவருக்கு 3வது ஆஸ்கர் விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
வரும் 2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது சிறந்த பாடல் மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய இரண்டு பிரிவுகளுக்கான முதல் கட்ட தேர்வு பட்டியலில் ஆடுஜீவிதம் படம் இடம்பெற்றுள்ளது. சிறந்த பாடல் பிரிவில் மொத்தம் 89 பாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், ஆடுஜீவிதம் படத்தில் இருந்து 2 பாடல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பின்னணி இசைக்கு 146 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதிலிருந்து 15 பாடல்கள் மற்றும் 20 பின்னணி இசை தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கர் விருதுக்கான இறுதி பட்டியலுக்கு செல்லும். அதனால் மீண்டும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் ஆஸ்கர் விருதை மீண்டும் நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆஸ்கர் விருது அறிவிப்பை எதிர்பார்த்து இந்திய ரசிகர்களை ஏஆர் ரகுமான் மீண்டும் 3வது முறையாக ஆஸ்கர் விருது பெறுவாரா என்று பலத்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.





