சினிமா இசைத்துறையில் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான். கடந்த 1989ம் ஆண்டில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். முதல் படத்திலேயே சின்ன சின்ன ஆசை பாடலுக்கு தேசிய விருது பெற்றவர். இப்போது 2 முறை ஆஸ்கர் விருது, 7 முறை தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.
கடந்த வாரத்தில், ஏஆர் ரகுமானின் மனைவி சாயிரா பானு, திருமணமாகி 29 ஆண்டுகள் கடந்த நிலையில் திடீரென ஏஆர் ரகுமானை பிரிவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பதிலளித்த ஏஆர் ரகுமானின் உடைந்த இதயங்களின் கனத்தால் கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்குகிறது. இந்த பிரிவை ஏற்றுக்கொள்ளுங்கள் என ரசிகர்களுக்காக பதிவிட்டு இருந்தார்.
இந்த விவகாரம் வெளிவந்த அதே நாளில் ஏஆர் ரகுமானின் இசைக்குழுவை சேர்ந்த பெண் கிடாரிஸ்ட் மோனிகா டே என்பவரும் தன் கணவர் மார்க் என்பவரை பிரிவதாக அறிவித்தார். உடனே ஏஆர் ரகுமானுக்கும், மோனிகா டேவுக்கும் முடிச்சுப் போட்டு இணையத்தில் வதந்தி பரவியது. சில விமர்சகர்கள், யூடியூப்களில் அதை உறுதிப்படுத்தி பேசினர்.
இதையடுத்து இப்படி என் மீது அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் தனது வக்கீல் மூலம் எச்சரிக்கை விடுத்தார். ஏஆர் ரகுமான் அமீன் என் தந்தை லெஜண்ட். அவர் மீது பழி சுமத்தாதீர்கள் என்று பதிவு செய்தார். ஏஆர் ரகுமானின் மனைவி சாயிரா பானுவும், என் கணவரின் பெயருக்கு களங்கம் செய்யாதீர்கள் என்று ஆடியோ வெளியிட்டார்.
இதற்கிடையே கிடாரிஸ்ட் கலைஞர் மோனிகா டே வெளியிட்ட பதிவில், ஏஆர் ரகுமான் எனக்கு தந்தையை போன்றவர். அவரது மகளது வயதுதான் எனக்கும். கண்ணியமாக பேசுங்கள் என்றும் விளக்கம் தந்திருந்தார். தற்போது ஏஆர் ரகுமான் தனது குடும்ப பிரச்னைகள் காரணமாக ஒரு ஆண்டுக்கு இசையில் இருந்து ஒய்வு பெற இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏஆர் ரகுமான் வசம் இப்போது 18 படங்கள் உள்ளன. மேலும், ஆடுஜீவிதம் படத்துக்கு 3வது முறையாக அவருக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவும் வாய்ப்புள்ள நிலையில், இப்படி ஒரு தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து ஏஆர் ரகுமானின் மகள் கதிஜா வெளியிட்டுள்ள பதிவில், ஏன் இப்படி தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறீர்கள் என, கேள்வி எழுப்பி இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.





