தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களைக் கொடுப்பதில் சக்கரவர்த்தியாக திகழ்பவர் இயக்குனர் சுந்தர் சி. ஒரு திரைப்படத்தை, நகைச்சுவை கலந்து ஆக்சன் பேக்கேஜ் திரைப்படம் ஆகவும், ஜாலியான என்டர்டைன்மென்ட் ஆகவும் கொடுக்கும் வித்தையை தனது முதல் திரைப்படம் ஆன முறைமாமன் படத்திலேயே நிருபித்து விட்டார் சுந்தர் சி.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து, அவர் இயக்கத்தில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி கொடி நாட்டின. குறிப்பாக உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம், தமிழ் சினிமாவின் புது டெம்ப்ளேட் ஆக மாறியது. அத்தனை நகைச்சுவையுடன் ஒரு திரைப்படத்தை சக்சஸ் புல்லாக எடுக்க முடியுமா என்று பலரும் வியக்கும் அளவுக்கு அதனை எடுத்து இருந்தார் சுந்தர் சி.
இது மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களுடனும் அவர் முக்கியமான திரைப்படத்தை எடுத்துள்ளார். ரஜினிகாந்தை வைத்து அவர் எடுத்த அண்ணாமலை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. வித்தியாசமான கான்செப்ட் உடன் எடுக்கப்பட்ட அந்த திரைப்படத்தை, இப்போது வரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இதேபோல் கமல்ஹாசனை வைத்து அன்பே சிவம் திரைப்படத்தை இயக்கியிருந்தார் சுந்தர் சி. என்னது அந்த திரைப்படத்திற்கு இவர் தான் இயக்குனரா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு தனது பாணியில் இருந்து சுத்தமாக விலகி அன்பை சிவத்தை அவர் எடுத்திருந்தார். தொடர்ந்து ரசிகர்களுக்கு எப்போதும் நகைச்சுவை விருந்து அளித்து வரும் அவர், சமீபகாலமாக அரண்மனை படத்தின் சீரிஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஒரு அரண்மனை, அதில் தங்கியிருக்கும் பேய், அதனால் ஏற்படும் விளைவுகள், ஆங்காங்கே நகைச்சுவை என ஒரே டெம்ப்ளேட் ஆக இருந்தாலும் அதனை சுவாரஸ்யம் குறையாமல் சுந்தர் சி கொடுத்து வருகிறார். இதன் காரணமாக, அரண்மனை படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் இரண்டும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
மூன்றாம் பாகம் அந்த அளவுக்கு எடுபடாத நிலையில் தற்போது நான்காம் பாகம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் படத்தின் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதியில் இரண்டுமே நன்றாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சில தேவையில்லாத காமெடிகள் மட்டுமே படத்திற்கு குறையாக இருப்பதாகவும், ஆனால் அதனையும் தனது திரைக்கதை மூலம் சுந்தர் சி மறக்க அடிக்கச் செய்து விட்டதாகவும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தமன்னாவின் நடிப்பு பேசக்கூடிய வகையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல கமர்சியல் படம் வெளிவந்திருப்பதாக சுந்தர் சி பாராட்டி வருகின்றனர்.





