தமிழ் சினிமா மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்திய சினிமாவே கவனிக்கும் ஒரு முக்கிய நபராக மாறி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். வெறும் இரண்டே இரண்டு திரைப்படங்களை இயக்கியும், ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தும் புகழின் உச்சிக்கே சென்று விட்டார். சொல்லப்போனால் இன்றைய தலைமுறையினரின் நாடித்துடிப்பு அறிந்து சக்சஸ் கொடுக்கும் இயக்குனர் அவர் என்று கூறலாம்.
முதலில் 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையை நினைவுபடுத்தி பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அளித்தது. ரவி மோகனுக்கும் அந்த திரைப்படம் ஒரு பிளாட்பார்மை கொடுத்தது. இதன்பிறகு பிரதீப் ரங்கநாதனே இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம், லவ் டுடே.
இன்றைய தலைமுறையில் காதலர்கள் தங்களுக்குள் செல்போனை பரிமாறிக் கொண்டால் என்னென்ன விளைவுகள் எல்லாம் ஏற்படும் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை நகைச்சுவை கலந்து கூறியிருந்ததால் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இத்தனைக்கும் மிகக் குறைந்த பட்ஜெட்டில் தான் இந்த திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். அதேசமயம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி இந்த திரைப்படம் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபம் மேல் லாபம் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து தனது நண்பர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில், டிராகன் திரைப்படத்தில் நடித்தார் பிரதீப் ரங்கநாதன்.
ஒரு திரைப்படத்தின் கதை மிக ஸ்ட்ராங்காக இருந்தால் அது பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்த திரைப்படம் தான் டிராகன். படம் வெளியாகி 15 நாட்களைக் கடந்தும் தற்போது வரை டிராகன் நல்ல வரவேற்புடன் சென்று கொண்டிருக்கிறது.
வெறும் பத்தே நாட்களில் அந்த திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி உள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்ய ஏஜிஎஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதற்கான ட்ரெயிலரும் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு ரிட்டன் ஆப் தி டிராகன் என பெயர் வைத்திருக்கிறார்கள். டப்பிங் படம் ஹிந்தியில் வரும் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.





