தமிழ் சினிமாவில், பல ஆண்டுகளாக நடிகராக இருப்பவர்கள் ஒரு கட்டத்துக்கு பிறகு நடிப்பை விட, படம் எடுக்கும் வித்தைகளை கற்றுக்கொள்கின்றனர். தொழில்நுட்பங்களை காட்டிலும் கதை, திரைக்கதை உருவாக்கம் குறித்து தெரிந்துக்கொண்டாலே, புதிதாக படம் எடுக்கும் துணிச்சல் வந்துவிடுகிறது.
அதேபோல், பல ஆண்டுகளாக கேமரா பின் நின்று, நடிகர் நடிகைகளை நடிப்பை சொல்லிக் கொடுக்கும் இயக்குநர்கள், ஒரு கட்டத்துக்கு பிறகு அவர்களும் நடிகர்களாகி விடுகின்றனர். அவர்களது நடிப்பு, மற்ற நடிகர்களை விட மிக இயல்பாகவே, அருமையாக இருக்கிறது. உதாரணமாக பாரதிராஜா, மணிவண்ணன் போன்றவர்களை சொல்லலாம்.
அந்த வகையில், இப்போது ஒரு நடிகர் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். துவக்கத்தில், பெண்களை கவர்ந்த இளம் ஹீரோவாகவும், பின்னால் மிரட்டும் வில்லனாகவும் அசத்திய அரவிந்த் சாமி தான், இப்போது இயக்குநராகிறார். மலையாள நடிகர் பகத்பாசில் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
நடிகர் அரவிந்த் சாமி, ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். எந்நேரமும் பலவிதமான புத்தகங்களை வாசித்துக்கொண்டே இருப்பவர். உலக சினிமாக்களை அதிகளவில் பார்த்து வருபவர். தவிர, சினிமா சார்ந்த பல விஷயங்களை அவர் அனுபவ ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாகவும் கற்றுக்கொண்டவர்.
அவர் நடிக்கும் படங்களில் கூட, சில காட்சிகளில் இப்படி நடித்திருக்கலாம். இந்த கதாபாத்திரங்களை இப்படி மாறுபட்டு சித்தரித்து இருக்கலாம் என, சக நடிகர் நடிகைகளிடம் தனது கருத்துகளை அரவிந்த் சாமி அடிக்கடி பரிமாறிக் கொள்வது வழக்கம்தான். அதனால், அவர் நடிகராக இருந்ததை போலவே இயக்குநர் ஆனாலும், நிச்சயம் தனிமுத்திரை பதிப்பார் என்பதில் ஐயமில்லை.
இந்நிலையில், அவர் தனது இயக்கத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு அணுகியது நடிகர் தனுஷைதான். ஆனால், தனுஷ் இதற்கு சம்மதிக்கவில்லை. அவர் மறுத்துவிட்ட நிலையில், ஐந்து ஆண்டுகள் கழித்தே இப்போது பகத்பாசிலை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார் அரவிந்த் சாமி.





