தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர் இயக்குனர் ஷங்கர். 1990களில் அவர் இயக்கிய ஜெண்டில்மேன் காதலன் முதல்வன் ஜீன்ஸ் படங்களிலேயே இப்படி ஒரு புகழ் அவருக்கு கிடைத்து விட்டது. 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இயக்குனராக உள்ள அவர் இதுவரை 15 படங்கள் மட்டுமே டைரக்ட் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற 2 மகள்களும் அர்ஜித் என்ற மகனும் இருக்கிறார். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட நிலையில், இளைய மகள் அதிதி ஷங்கர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். விருமன் மாவீரன் நேசிப்பாயா போன்ற படங்களில் அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கரும் தமிழ் சினிமாவில் நடிக்க தயாராகி விட்டார். புதுமுக நாயகனாக அவர் அறிமுகமாகிறார். நடனப்புயல் என அழைக்கப்படும் நடிகர் மற்றும் இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் அர்ஜித் ஷங்கர் நடிக்க இருப்பது உறுதியாகி விட்டது. இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் காதலன் என்ற படத்தில்தான் நடன இயக்குனராக இருந்த பிரபுதேவா நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் நக்மா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். காதலன் படத்தின் அபார வெற்றிக்கு பிறகுதான் பிரபுதேவா பல படங்களில் நாயகனாக நடித்து முன்னணி இடத்துக்கு வந்தார்.
இப்போது தன்னை நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குனர் ஷங்கர் மகனை, பிரபுதேவா தனது இயக்கத்தில் நாயகனாக அறிமுகப்படுத்துகிறார். வழக்கமாக பல இயக்குனர்கள் தனது மகனை தன்னுடைய இயக்கத்தில் அறிமுகப்படுத்தும் நிலையில், இயக்குனர் ஷங்கர் மற்றொரு இயக்குனர் மூலம் தனது மகனை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்ய வைப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பிரபுதேவா இயக்கத்தில் அர்ஜித் ஷங்கர் அறிமுகமாகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை மமிதா பைஜூவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏற்கனவே விஜய் படத்தில் நடித்து வரும் மமிதா பைஜூ அடுத்து சிம்பு விஷ்ணு விஷால் பிரதீப் ரங்கநாதன் படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்போது இயக்குனர் ஷங்கர் மகனுக்கும் ஜோடியாக நடிப்பது, அவரது அபரிதமான வளர்ச்சியை காட்டுகிறது.





