தமிழ் சினிமா இயக்குநர்களில் மிக முக்கியமான ஒருவர் இயக்குநர் அமீர். மிகச்சிறந்த படைப்பாளி என்பதை அவரது படங்கள் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக மவுனம் பேசியதே என்ற முதல் படத்திலேயே கவனிக்கப்பட்டார். ராம், பருத்திவீரன் படங்கள் வேற லெவலில் இருந்தன.
இப்போது மாயவலை என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். பிப்ரவரி மாதம் அந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பருத்திவீரன் தயாரிப்பு குறித்த பிரச்னை போய்க் கொண்டு இருக்கிறது. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, அமீரை இழிவாக பேசியது தமிழ்ச சினிமாவில் பயங்கர கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் சிவக்குமார் தரப்பு இந்த பிரச்னையை சுமூகமான முடிவுக்கு கொண்டுவரும் திட்டத்தில் இருப்பதாகவும், அமீருக்கு பருத்திவீரன் தயாரிப்புக்காக மொத்த தொகையை முடிவு செய்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. ஆனால் தயாரிப்பாளர் தனஞ்செயன் என்பவர் இந்த விஷயத்தில் தேவையின்றி அமீருக்கு ஆதரவாக நிற்பவர்களிடம் பேசி வருவதாக தகவல் பரவியது.
தயாரிப்பாளர் தனஞ்செயன் இயக்குநர்கள் சசிக்குமார், கரு பழனியப்பன், தினகரன் ஜெய், அம்மா கிரியேசன்ஸ் சிவா போன்றவர்களை சந்தித்து ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக பேசியதாகவும், பத்திரிகையாளர் பிஸ்மியிடம், இந்த பிரச்னைக்கு தங்களுக்கு ஆதரவாக காணொலி பதிவிடவும் வேண்டுகோள் விடுத்ததாகவும் தகவல் வெளியானது.
இதுகுறித்து ஒரு ஆடியோ பதிவை வெளியிட்ட இயக்குநர் அமீர், என் வாழ்க்கையோடு உரிமைகளோடு விளையாடாதீகள், இந்த பிரச்னையில் இருந்து விலகிக்கொள்ளுங்கள் என தனஞ்செயனுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதற்கு தனஞ்செயன் பதில் ஆடியோ பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தனஞ்செயன் கூறியிருப்பதாவது, நான் சசிக்குமார், கரு பழனியப்பன் போன்றவர்களை நேரில் சந்திக்கவில்லை. போனில்தான் பேசினேன். இந்த பிரச்னைக்கு இரு தரப்பிலும் சுமூகத்தீர்வு ஏற்பட வேண்டும் என்றுதான் சொன்னேன். பத்திரிகையாளர் பிஸ்மியிடம், எங்களுக்கு ஆதரவாக காணொலி போடுங்கள் என கேட்கவே இல்லை. நீங்கள் இயக்குநர் சங்க செயலாளராக இருந்த போது என் விஷயத்தில் நீங்கள் மிகவும் நியாயமாக தான் நடந்துக்கொண்டீர்கள். உங்கள் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் எனக்கு இல்லை. உங்கள் மீது எந்த வன்மமும் இல்லை. இனிமேல் உங்களை பற்றி எதுவுமே பேச மாட்டேன், என அதில் கூறியிருக்கிறார்.





