இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவிடம் உதவியாளராக இருந்தவர் அருண் மாதேஸ்வரன். தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் திரைப்படம், வசூல் ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தத் திரைப்படத்தில் தான் உதவியாளராக பணி புரிந்திருக்கிறார் அருண் மாதேஸ்வரன். இந்த நிலையில் அவருக்கு முதல் திரைப்படமாக அமைந்தது ராக்கி.
நயன்தாரா விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்தனர். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. அதேசமயம் வசூலில் கல்லாகட்ட தவறி விட்டது ராக்கி திரைப்படம். இதற்கு முக்கிய காரணம் படத்தில் இருந்த அதீத ஆக்ஷன் காட்சிகள் தான்.
ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டை காட்சிகள் அதிகம் இருந்தது, வெகுஜன ரசிகர்களை சலிப்படையச் செய்ததால் ராக்கி திரைப்படம் ஓடவில்லை. இதைத்தொடர்ந்து அவரது இயக்கத்தில் சாணி காகிதம் திரைப்படம் வெளியானது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோர் நடித்திருந்தனர். இது திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது.
மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படமும், சண்டைக் காட்சிகள் தூக்கலாக இருந்ததால் பலரின் கவனத்தைப் பெற தவறவிட்டது. ஓடிடியில் வெளியானதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறலாம். வழக்கமான பழிவாங்கல் கதையில் எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், கீர்த்தி சுரேஷின் நடிப்பிற்காக பாராட்டப்பட்டது. இந்த நிலையில் தான் அருண் மாதேஸ்வரன் மூன்றாவது படத்திற்காக தனுஷிடம் இணைந்துள்ளார்.
இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சிவராஜ்குமார், சந்திப் கிஷன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படம் குறித்த பல்வேறு விஷயங்களை, அருண் மாதேஸ்வரன் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது, கேப்டன் மில்லரில் மொத்தம் மூன்று பாகங்கள் உள்ளன. இப்போது நாங்கள் எழுதி இருப்பது இரண்டாம் பாகம் தான்.
இதற்கு முந்தைய பாகமும் இதற்கு அடுத்தபாகமும் இன்னும் இருக்கிறது. சண்டைக்காரர்களின் வாழ்க்கையை தான் இந்த திரைப்படம் பிரதிபலிக்கிறது. 1930 முதல் 40 காலகட்டங்களில் இருப்பதைப் போல் இந்த திரைப்படத்தை படமாக்கி உள்ளோம். இதற்காக நாங்கள் எந்த ஒரு வி எப் எக்ஸ் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. ஐந்து சதவீதம் மட்டுமே லைட்ஸ் இதற்கு உபயோகிக்கப்பட்டுள்ளது. 120 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில் 25 நாட்கள் சண்டை காட்சிகள்தான் எடுக்கப்பட்டிருக்கின்றன. சந்திப் கிஷன் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோரின் நடிப்பு வேற லெவலில் இருக்கும். 20 முதல் 25 நிமிடங்கள் வரை சந்தீப் கிஷன் படத்தில் வருவார் என்று கூறியிருக்கிறார்.





