தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. துவக்கத்தில் புதுப்பேட்டை, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, வெண்ணிலா கபடிக்குழு போன்ற சில படங்களில் துணை நடிகராக நடித்து வந்த விஜய் சேதுபதி, தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், சுந்தரபாண்டியன், பீட்சா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பண்ணையாரும் பத்மினியும், ரம்மி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பிறகு தர்மதுரை, காதலும் கடந்து போகும், கருப்பன், ஆண்டவன் கட்டளை, சேதுபதி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். விடுதலை படத்தில் பெருமாள் வாத்தியராக அசத்தியிருந்தார்.
இதற்கிடையே சில படங்களில் வில்லனாகவும் விஜய் சேதுபதி நடித்தார். குறிப்பாக பேட்ட, விக்ரம், மாஸ்டர், ஜவான் போன்ற படங்களில் விஜய் சேதுபதியின் வில்லன் நடிப்பு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் இப்படி பல படங்களில் ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்தது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் அவரது 50வது படம் மகாராஜா பெரிய வெற்றியை கொடுத்து அவரை கம்பேக் வரச்செய்தது.
இந்நிலையில் விஜய் டிவியில் 7 ஆண்டுகளாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில், நடிகர் கமல் இந்த முறை அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பிறகு அவரது இடத்தில் நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். வருகிற 6ம் தேதி, மாலை 6 மணிக்கு சீசன் 8 பிக்பாஸ் துவங்க உள்ளது.
விஜய் சேதுபதி, துணை நடிகராக இருந்து பெரிய நடிகராக முன்னுக்கு வந்தவர் என்பதால், திரைத்துறை சார்ந்தவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்வார். சிறிய பட்ஜெட் படங்களை தயாரிப்பார். அதே நேரத்தில் யாரேனும் தன்னுடைய படத்துக்கு பிரமோசன் செய்ய, விஜய் சேதுபதியை உதவச் சொன்னால் கண்டிப்பாக அந்த பட விழாவில் கலந்துக்கொள்வார். அதே போல் தனது வலைதள பக்கத்தில் அந்த படம் குறித்தும் பதிவுகளை செய்வார்.
பெரிய நடிகர் விஜய் சேதுபதி குறிப்பிட்டுச் சொல்லும் படம் என்றால், ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனமும் வரவேற்பும் கிடைக்கும். அதனால் பலரும் அவரை அணுகுவது உண்டு. ஆனால் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதால் இன்னும் 3 மாதங்களுக்கு அவர் எந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியிலும் பங்கேற்க கூடாது, எந்த படத்துக்கும் அப்டேட் தரக் கூடாது என பிக்பாஸ் நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் பலரும், அப்செட் ஆகி உள்ளனர்.





