ராக்கி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். பிறகு சாணிக்காயிதம் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. வரவேற்புக்குரிய ஒரு நல்ல படமாகவும் இந்த படம் விமர்சிக்கப்பட்டது.
செல்வராகவன் கீர்த்தி சுரேஷ் நடித்த சாணிக்காயிதம் சிறந்த க்ரைம் படமாகவும் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு பிறகு நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கினார். கடந்த 1930ம் ஆண்டுகளில் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் நடந்த கதைக்களத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது.
தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன், தனுஷ் நடிக்கும் இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க கமிட் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டிலேயே இந்த படத்தின் அறிமுக விழா நடத்தப்பட்ட நிலையில் கதாநாயகன் தனுஷ் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் நடிகர் கமல்ஹாசன் இந்த விழாவில் கலந்துக்கொண்டனர்.
ஆனால் நடிகர் தனுஷ் இப்போது நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் இயக்குனர் என மாறி அடுத்தடுத்த லைன் அப்களில் மிகவும் பிஸியாக இருந்த வருகிறார். இளையராஜா படப்பிடிப்பு துவங்குவதிலும் தொடர்ந்த கால தாமதம் நீடித்து வருகிறது. மும்பையை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் விலகிய நிலையில் தற்போது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், மெர்க்குரி நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரிப்பது உறுதியாகி விட்டது.
நடிகர் தனுஷ் தொடர்ந்து பிஸியாக இருப்பதால், அதற்குள் இன்னொரு படத்தை டைரக்ட் செய்துவிடலாம் என்ற முடிவுக்கு இயக்குனர் அருண் மாதேஸ்வரன் வந்திருக்கிறார். சமீபத்தில் இந்தி படவுலகம் பக்கம் சென்ற அவர் நடிகர் அக்ஷய் குமாரை பார்த்து கதை சொல்லி இருக்கிறார். கேட்டவுடன் அவரும் ஓகே சொல்லி விட்டார். முழுக்க முழுக்க ஆக்ஷன் களத்தில் இந்த படம் உருவாகிறது.
வருகிற ஜூலை மாதம் துவங்கி டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த இந்தி படத்தை டைரக்ட் செய்து முடித்துவிட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் திட்டமிட்டு அதற்கான முன்கட்ட பணிகளை துவங்கிவிட்டார். அதன்பிறகுதான் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் படப்பிடிப்பு அடுத்த 2026ம் ஆண்டில் துவங்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.





