தமிழில் வளர்ந்து வரும் இளம் நாயகனாக இருப்பவர் நடிகர் அசோக் செல்வன். சூது கவ்வும் தெகிடி ஓ மை கடவுளே போர்த்தொழில் நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இன்னும் முன்னணி நடிகராக அவர் பெரிய வெற்றிகளை தொடவில்லை என்றாலும் தொடர்ந்து நல்ல கதைகளை கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கில் நடிகர் நாகர்ஜூனா நடிக்கும் அவரது 100வது படத்தை தமிழ் பட இயக்குனர் ரா கார்த்திக் டைரக்ட் செய்கிறார். இவர் தமிழில் நித்தம் ஒரு வானம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தெலுங்கு நடிகரான நாகர்ஜூனா தனது 100வது படத்தை இயக்கும் வாய்ப்பை ஒரு தமிழ் பட இயக்குனருக்கு தந்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
நாகர்ஜூனா தெலுங்கில் மட்டுமின்றி தமிழில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக அவர் கடந்த 1990களில் தமிழில் உதயம் இதயத்தை திருடாதே ரட்சகன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படங்கள் எல்லாமே அந்த காலத்தில் பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படங்களாகவும் இருந்தன.
சமீபத்தில் நடிகர் தனுஷூடன் குபேரா படத்திலும் நடிகர் ரஜினியுடன் கூலி படத்திலும் நடிகர் கார்த்தியுடன் தோழா படத்திலும் நடித்திருந்தார். அதனால் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகர் நாகர்ஜூனா. மேலும் அவரது மனைவி அமலாவும் தமிழ் நடிகை தான். மெல்ல திறந்தது கதவு கொடி பறக்குது அக்னி நட்சத்திரம் மாப்பிள்ளை சத்யா வெற்றிவிழா என பல படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது இந்த படத்தில் நடிகர் நாகர்ஜூனாவுக்கு வில்லனாக நடிப்பவர் நடிகர் அசோக் செல்வன் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் கொடூரமான ஒரு வில்லன் கேரக்டரில் அவர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. நித்தம் ஒரு வானம் படத்தில் இயக்குனர் ரா கார்த்திக் இயக்கத்தில் ஹீரோவாக நடித்த அவர் அந்த நட்பின் காரணமாக, இந்த படத்தில் நடிக்க கமிட் ஆகியிருப்பதாக தெரிகிறது.
வளர்ந்து வரும் இளம் ஹீரோ நடிகரான அசோக் செல்வன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பது முரண்பாடாக இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் ஹீரோவாக வளர்ந்து வந்த காலத்தில் மாஸ்டர் பேட்ட விக்ரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்து பெரிய வரவேற்பை பெற்றார். அதுபோல் ஹீரோ வில்லன் என 2 ரோல்களிலும் தனது திறமையை வெளிப்படுத்த அசோக் செல்வன் முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.





