தீனா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ ஆர் முருகதாஸ், அங்கிருந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். குறிப்பாக தளபதி விஜய் வைத்து அவர் துப்பாக்கி மற்றும் கத்தி என இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்தார். ஆனால் சமீப காலமாக அவர் இயக்கிய திரைப்படங்கள் தோல்வி அடைந்தன.
விஜய்யை வைத்து அவர் எடுத்த சர்கார், ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் மற்றும் ஸ்பைடர் ஆகிய மூன்று திரைப்படங்களுமே விமர்சன ரீதியாக தோல்வியடைந்தது. இப்படியான சூழலில் தான் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இது சிவகார்த்திகேயனின் 23 வது திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்காக சிவகார்த்திகேயன் அடர்ந்த தாடியுடன் காட்சியளிக்கிறார். படத்தில் ருக்மணி வசந்த், பிஜுமேனன், வித்யூத் ஜமால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோசாக கலக்கியவரும், இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கிறார்.
இதற்கான படப்பிடிப்பு தற்போது சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட கேரக்டர் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இந்த படத்தில் 80 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. இதனை விரைவாக முடித்துவிட்டு அடுத்ததாக பாலிவுட் திரையுலகத்திற்கு செல்கிறார் ஏ ஆர் முருகதாஸ்.
அவர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்னும் திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்திற்கான பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார், ஏ ஆர் முருகதாஸ். இப்படியான சூழலில் சல்மான் கானை வைத்து இயக்குனர் அட்லியும் ஒரு திரைப்படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு அவர் இயக்கத்தில் ஜவான் திரைப்படம் வெளியாகி இருந்தது. ஷாருக்கான் நடிப்பில் ரிலீஸ் ஆன அந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது. இதன் பிறகு அவர், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் தற்போது அந்த பிளான் நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர் சல்மான் கானிடம் ஒரு கதை கூறியிருப்பதாகவும் இதற்கு நடிகரும் ஓகே தெரிவித்து விட்டதாகவும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. ஆனால் இந்த திரைப்படம் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.





