இந்திய சினிமாவில் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு பிரமாண்ட காவியம் என்றால் அதில் நிச்சயமாக பாகுபலி திரைப்படம் இருக்கும். ஏனென்றால் ஒரு சரித்திர படத்தை இவ்வளவு சிறப்பாக ரசிகர்களுக்கு கொடுத்த பெருமை இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலிக்கே சேரும். பாகுபலி 1 மற்றும் 2 படங்களை மிக அழுத்தமான படைப்புகளாக தந்து ரசிகர்களை அசத்தி விட்டார்.
கடந்த 2015ம் ஆண்டில் வெளியான படம் பாகுபலி. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. படத்தில் நாயகனாக பிரபாஸ் அமரேந்திர பாகுபலியாகவும் வில்லன் கேரக்டரில் பல்வாராயன் கேரக்டரில் டாணா டகுபதியும் தேவசேனையாக அனுஷ்காவும் இந்த படத்தில் வாழ்ந்திருந்தனர்.
மேலும் இந்த படத்தில் நாசர் சத்யராஜ் ரம்யா கிருஷ்ணன் ரோகிணி உள்ளிட்ட பலர் பிரதான கேரக்டர்களில் நடித்திருந்தனர் குறிப்பாக கட்டப்பா கேரக்டரில் சத்யராஜ் நடிப்பும் ராஜமாதா சிவகாமி தேவி கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு கீரவாணி இசையமைத்திருந்தார்.
பாகுபலி படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் பாகுபலி 2ம் பாகம் 2017ம் ஆண்டில் வெளியாகி அந்தப் படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. உலகளவில் 1800 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்தது. முதல் பாகத்தில் இருந்த பல புதிர்களுக்கு 2ம் பாகம் விடையாக அமைந்தது. முதல் பாகத்தை விட 2ம் பாகம் ரசிகர்களை மிரட்டியது.
இந்நிலையில் பாகுபலி படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது இந்த படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. பாகுபலி பாகம் 1 படம் வரும் அக்டோபர் மாதம் ரி ரிலீஸ் செய்யப் போவதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் மீண்டும் தியேட்டரில் பாகுபலி படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
ஜெய் மகிழ்மதி என்ற அந்த கம்பீரமான வசனமும் பாகுபலி படத்தில் பிரபாஸ் அனுஷ்கா ஆகியோரின் அற்புதமான நடிப்பும் நாசர் சத்யராஜ் ரம்யாகிருஷ்ணன் போன்றவர்களில் அழுத்தமான நடிப்பும் கீரவாணியின் இசையில் உருவான பாடல்களையும் மீண்டும் திரையில் ரசிக்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முதல் பாகத்தை தொடர்ந்து பாகுபலி 2ம் பாகம் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாக வாய்ப்பும் உள்ளது.





