நடிகர் விஜய் நடித்த லியோ படம், கடந்த மாதம் 19ம் தேதி வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார் தயாரித்த இந்த படத்தை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்திருந்தார். எதிர்பார்த்தபடியே, இந்த லியோ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
லியோ ரிலீஸ் ஆன 12 நாட்களில், 540 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. பார்த்திபன், லியோ என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருந்தார். இது முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களுக்கு தீனி போடும் விஜய் படமாக மட்டுமே இருந்தது.
விஜய் சிகரட் பிடிப்பது போன்ற புகைப்படங்கள், விஜய் டிரெய்லரில் பேசிய கெட்ட வார்த்தை போன்றவை படம் குறித்த எதிர்விமர்சனங்களை பெற்றாலும் படம், ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் ஹய்னா வரும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், திடீரென லியோ படம் வெற்றி விழா, நவம்பர் 1ம் தேதி சென்னை இன்டோர் ஸ்டேடியத்தில் நடக்க இருப்பதாகவும், அதற்காக லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், போலீஸ் அலுவலகத்தில் கடிதம் எழுதி அனுமதி கேட்டிருப்பதாகவும் தகவல் பரவியது.
இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் சமீப காலமாக விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழா நடக்கிறதே தவிர, வெற்றி விழா நடப்பதில்லை. அதுவும் லியோ படம் வெளியான இரண்டே வாரங்களில் இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. விழாவும் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது.
இதற்கிடையே லியோ படம் வெற்றிவிழா நடத்தப்பட்டதற்கான பின்னணி காரணம் இப்போது தெரிய வந்துள்ளது. அதாவது, லியோ படத்தை வாங்கிய சாட்டிலைட் சேனல் நிறுவனம், இசை வெளியீட்டு விழாைவ ஒளிபரப்பு செய்ய, ஒரு பெரிய தொகையை. தயாரிப்பாளரிடம் முன்பே வழங்கி இருக்கிறது. இசை வெளியீட்டு விழா நடக்காததால், அந்த தொகையை திருப்பி கேட்டிருக்கிறது. இதையடுத்து, இசை வெளியீட்டு விழாவுக்கு பதிலாக, படத்தின் வெற்றிவிழாவை நடத்துகிறோம். அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிக் கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார் தயாரிப்பாளர் லலித்குமார். இதுகுறித்து விஜயிடம் பேசி சம்மதம் வாங்கிய அவர், வெற்றி விழாவை நடத்தி இருக்கிறார்.





