தமிழ் சினிமா இயக்குனர்களில் மிக முக்கியமான ஒருவராக இருப்பவர் இயக்குனர் பாலா. இயக்குனர் பாலுமகேந்திராவிடம் தொழில் கற்று பிறகு இயக்குனராக சேது படம் மூலம் அறிமுகமானார். சேது படம் பாலாவுக்கு மட்டுமின்றி நடிகர் விக்ரம் வாழ்விலும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
வழக்கமாக கமர்ஷியல் படங்கள், ஹீரோயிசம் சார்ந்த படங்களை மட்டுமே இயக்கி சம்பாதிக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் ஆளுமை மிக்க நல்ல படங்களை தரும் இயக்குனர்களில் பாலா முக்கியமானவர். அவர் இயக்கிய நான் கடவுள் பரதேசி ஆகிய 2 படங்களும் மக்களுக்கான படங்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்றுத்திறனாளிகளை மையப்படுத்திய நான் கடவுள் படமும், தேயிலை தோட்டத்தில் அடிமை தொழிலாளர்களாக மாட்டிக்கொண்டு பலவிதமான துன்பங்களுக்கு ஆளான கதையை பரதேசி படமாகவும் பாலா தந்திருந்தார். தாரை தப்பட்டை படத்துக்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து பாலாவின் வணங்கான் படம் கடந்த பொங்கலுக்கு வெளியானது.
சேது நந்தா பிதாமகன் அவன் இவன் நான் கடவுள் பரதேசி தாரை தப்பட்டை வணங்கான் என 10க்கும் குறைவான படங்களை தந்துள்ள பாலா, தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை கடந்திருக்கிறார். சமீபத்தில் அவருக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பாலா 25 என்ற பாராட்டு விழாவை நடத்தினார். இதில் பாலாவால் வாழ்வு பெற்ற பல நடிகர் நடிகைகள் பங்கேற்கவில்லை.
தற்போது தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவகாரம் பெரிய அளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. இந்திக்கு ஆதரவு தராத தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியை தர மாட்டோம் என்று மத்திய அரசு மறுத்துள்ளது. இது மாணவர்களின் கல்வி நலனுக்கு எதிரான செயல் என்று திமுக அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தி மொழி திணிப்பை ஏற்க முடியாது என தமிழக மக்களும் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இயக்குனர் பாலாவிடம், மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன என்று பெண் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பாலா, இந்த விளையாட்டுக்கு எல்லாம் நான் ஆளில்லை, என்று ஒன்றுக்கு இரண்டுமுறை கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





