நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். முதலில் சென்னையில் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் 2 வாரங்கள் நடந்தது. பிறகு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் 20 நாட்கள் 2வது ஷெட்யூல் ஷூட்டிங் நடந்து முடிந்தது. இதில் பங்கேற்ற பிறகு கடந்த வாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேரளாவில் இருந்து சென்னை திரும்பினார்.
இப்போது மீண்டும் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை படக்குழு வேகமாக செய்து வருகிறது. படத்தின் இயக்குனர் நெல்சன் சமீபத்தில் நடிகர் மோகன்லாலை சந்தித்து ஜெயிலர் 2 படத்தில் அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் குறித்து விளக்கியிருந்தார். அந்த புகைப்படங்களும் வெளியாகின.
மேலும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இவர் தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில்தான் மத்திய அரசு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு பத்மபூஷண் விருது வழங்கியது. இதே விழாவில்தான் நடிகர் அஜீத்குமாரும் பத்மபூஷண் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் 2 படத்தில் முதல் பாகத்தில் நடித்த பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அதில் இறந்து போனது போல் காட்டப்பட்ட வில்லன் விநாயகன் வசந்த் ரவி ஆகியோர் தவிர மற்றவர்கள் நடிக்க அதிக வாய்ப்புள்ளது. காவலய்யா பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட தமன்னாவும் இந்த படத்தில் ஏதேனும் ஒரு காட்சியில் வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் ஜெயிலர் 2 படத்தில் சிவராஜ்குமார் ஜாக்கி ஷெராப் சுனில் கிஷோர் ரெடின் கிங்ஸ்லி போன்றவர்களும் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பது உறுதியான நிலையில், சில தினங்களுக்கு முன் சென்னைக்கு அவர் நேரில் வந்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் இயக்குனர் நெல்சனை சந்தித்து பேசியிருக்கிறார்.
அப்போது ஜெயிலர் 2 படத்தில் நடிக்க 20 நாட்கள் பாலகிருஷ்ணா கால்ஷீட் தந்திருக்கிறார். அதற்காக அவர் ரூ. 50 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். இதைக்கேட்ட படக்குழுவினர் ஆடிப்போய்விட்டனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் அதிர்ச்சியடைந்திருக்கிறது. எனினும் தெலுங்கில் அவர் பெரிய ஸ்டார் என்பதால் கேட்ட சம்பளத்தை கொடுக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 2.5 கோடி ரூபாய் சம்பளமா? ரஜினிக்கு கூட அவ்வளவு வராதே என புலம்புகின்றனர்.





