நடிகர் சிவகார்த்திகேயன், எல்லோருக்கும் பிடித்தமான இளம் நடிகர். விஜய் டிவியில் அது இது எது என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மத்தியில் அறிமுகமானார். பின், சினிமா விருது விழாக்களை தொகுத்து வழங்கும் காம்பியராக பணிசெய்தார். அடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இன்று, முன்னணி நாயகர்களில் ஒருவராக, தமிழ் சினிமாவில் வெற்றியாளராக வலம் வருகிறார். ரஜினிக்கு அடுத்தபடியாக, மிக குறைந்த காலத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகர் சிவகார்த்திகேயனாக தான் இருக்க முடியும். அவரது ஸ்டைல், நடிப்பு எல்லாமே ரஜினியை சார்ந்ததாகவே இருக்கிறது. இதை, மாவீரன் படத்தில் அவருடன் நடித்த இயக்குநர் மிஷ்கின் வெளிப்படையாகவே கூறி இருந்தார்.
டைம் டிராவல் கருவை மையப்படுத்திய இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில், அயலான் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்நிகழ்ச்சியில், படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் பேசினார். அப்போது, ஒரு விஷயத்தை மிக எளிமையாக, ஜாலியாக குறிப்பிட்டார். அது, இன்றைய முன்னணி ஹீரோக்களை நோஸ் கட் செய்யும் ஒரு விஷயமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய், வரும் 18ம் தேதி ரிலீஸ் ஆகும் லியோ படத்துக்காக ரூ. 125 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வரும் புதிய படத்துக்கு ரூ. 200 கோடி சம்பளம் பெறுகிறார். நடிகர் ரஜினி ஜெயிலர் படத்துக்கு ரூ.110 கோடியும், தற்போது நடிக்கும் ரஜினி 170 படத்துக்கு ரூ. 90 கோடியும் சம்பளமாக பெறுகிறார். நடிகர் கமல், ரூ. 150 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
இதில் மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், இப்படி ஸ்டார் நடிகர்கள் 100 கோடிகளுக்கு மேல் சம்பளம் கேட்பதால், படத்தின் தயாரிப்பு செலவுகளை வெகுவாக குறைத்து விடுகிறது அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம். ரஜினி 170 படத்தின் மொத்த பட்ஜெட், 165 கோடி என்ற நிலையில் ரஜினி, அமிதாப், ராணா, பகத் பாசில் என அவர்களது சம்பளமாக மட்டுமே ரூ.135 கோடி தரப்பட்டு, படம் தயாரிக்க ரூ. 30 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக படக்குழுவினர் சம்பளமும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அயலான் படம் அந்த கதையின் தன்மைக்கு ஏற்ப, பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு மிக பிரமாண்டமாக எடுக்கப்படுகிறது. படம் தரமாக, சிறப்பாக வர வேண்டும் என்றால், அதற்கேற்ப விஎப்எஸ் நவீன தொழில்நுட்பங்களுக்கு பல கோடிகள் செலவிட வேண்டும். அப்போதுதான் படம் மிக சிறப்பாக அமையும். இப்படியான ஒரு கட்டத்தில் அதற்கான தயாரிப்பு செலவுகளில் நிதி தட்டுப்பாடு ஏற்பட்ட போது, இந்த படத்தில் நடிப்பதற்காக, எனக்கு சம்பளமே வேண்டாம். படம் மட்டுமே நன்றாக வரவேண்டும் என்று கூறி இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இந்த விஷயம் பற்றி அயலான் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், எனக்கு சம்பளம் முக்கியமில்லை. அதை விட ராம்குமார் என்ற மிகப்பெரிய இயக்குநரை, நல்ல மனிதரை சம்பாதித்து இருக்கிறேன். அதுவே போதும். அவர்தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். அவரை போன்ற நல்ல மனிதரை இந்த படத்தில் சம்பாதித்து இருக்கிறேன் எனக்கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் ஒரு இளம் நடிகர் இந்த மனப்பக்குவத்தில் இருக்கும் போது ரஜினி, கமல், விஜய் போன்றவர்கள் இதுபோன்ற ஒரு உயர்ந்த மனநிலைக்கு வந்தால், நல்ல படங்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைக்கும்.





