தமிழ் சினிமா பற்றிய கணிப்பில், முன்பிருந்ததை காட்டிலும் தொழில்நுட்பத்தில் இப்போது வேற லெவலில் இருக்கிறது. வெளிநாட்டில், ஹாலிவுட், பாலிவுட் படங்களில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவில் இருக்கின்றன. அதேபோல் வசூலும் வரும் ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாயை தொடும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால் படங்களின் தரமும், திரைக்கதையும், படங்கள் சொல்லும் மையக் கருத்துகளும் தமிழ் சினிமா படங்களை போல மிக மோசமாக எந்த மொழியிலும் இல்லை என்று சொல்லலாம். ஆபாசம், வன்முறை, ஹீரோயிசம் தெலுங்கு படங்களில் மட்டுமே மிகையாக இருக்கும். இப்போது அதில் தெலுங்கு படங்களை பலமடங்கு மிஞ்சிவிட்டது தமிழ் படங்கள். அதிலும் லியோ படத்தில் க்ளைமேக்ஸில் 200 பேரை அடித்து நொறுக்கும் விஜய், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணனுக்கே சவால் விட்டுள்ளார்.
ஏனெனில் தெலுங்கு படங்களில் டிரெயினை விட வேகமாக ஹீரோக்கள் எல்லாம் ஓடி முந்தி விடுவார்கள். ஒரே உதையில், 100 கார்கள் பின்னால் பறக்கும். ஹீரோ நடந்தாலே, அந்த பகுதி முழுக்க பூகம்பமாய் நடுங்கும். 50 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில், ஹீரோ- வில்லன் இருவரும் கட்டிப்பிடித்து சண்டையிட்டு கொள்வார்கள்.
திரையில் இதுபோன்ற கோமாளித்தனங்களை பார்க்கும் போது, தலையில் அடித்துக்கொள்ள வேண்டிய ரசிகர்கள், அதற்கு பதிலாக கையை தட்டி பாராட்டுவதுதான் இதுபோன்ற படங்களின் வரவு அதிகரிக்க காரணம். தமிழ் சினிமாவில் லியோ, ஜெயிலர், பத்துதல, வாரிசு, துணிவு என பல படங்கள் இந்தாண்டில் மிக மோசமாக இருந்தாலும், சின்ன பட்ஜெட் படங்களாக வந்த 15 படங்கள், தமிழ் சினிமாவின் தரத்தை காப்பாற்றி இருக்கின்றன.
நடப்பாண்டில் வெளிவந்த சித்தா, குட்நைட், போர்த்தொழில், குய்கோ, கிடா, நாடு, பார்க்கிங், தண்டட்டி, இறுகப்பற்று, ஜோ, எறும்பு. யாத்திசை, அயோத்தி, டாடா, ஆயிரம் பொற்காசுகள் ஆகிய 15 படங்கள் சிறந்த கதையில் உருவான சின்ன பட்ஜெட் படங்களாக தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தி பிடித்திருக்கின்றன. இந்த படங்கள் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாமல் போனாலும் தமிழ் சினிமாவில் இதுபோன்ற கலையம்சம் சார்ந்த படங்களை தரும் படைப்பாளிகளும், கலைஞர்களும், இந்த படங்களை துணிந்து எடுக்க தயாரிப்பாளர்களும் இருக்கின்றனர் என்பதை உணர்த்துகின்றனர்.
சினிமா என்பது மிகவும் வலிமையான ஒரு ஊடகம். அதை சமுதாயத்தில் நல்ல உணர்வுகளை ஏற்படுத்தவும், மக்கள் மனங்களில் நல்ல மாற்றங்களை உருவாக்கவும் உதவும் கருவியாக உருவாக்குவதுதான் அந்த கலைக்கு, படைப்பாளி செய்கிற பெருமை. தங்களது கஜானா பெட்டிகளை கரன்ஸி தாள்களால், தங்கம், வைர நகைகளால் நிரப்பிக்கொள்ள வரும் கமர்ஷியல் நடிகர்கள், கமர்ஷியல் இயக்குநர்கள், கமர்ஷியல் தயாரிப்பாளர்களுக்கு இதைப் பற்றி எல்லாம் யோசிக்க நேரம் இருக்காது. ஏனெனில் யோசித்தால் நல்ல படங்களை தந்து விடுவார்கள் என்ற பயம்தான்.





