நடிகர் போண்டா மணி தமிழ் சினிமாவில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். காமெடி துணை நடிகர்களில் ஒருவராக நடித்தாலும், அவரது காட்சியில் அவரது நடிப்பும், வசன உச்சரிப்பும் சிறப்பாக இருந்து, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த போண்டாமணி, மயங்கி விழுந்து இறந்து விட்டார்.
இலங்கை அகதியாக தமிழ்நாட்டுக்கு வந்த அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்தது நடிகர் பாக்யராஜ். முதன்முறையாக அவர் பாக்யராஜ், ரோகிணி நடித்த பவுனு பவுனுதான் படத்தில்தான் போண்டாமணி அறிமுகமானார். அவரது நிஜப்பெயர் வேறு. போண்டா விரும்பி சாப்பிட்டதால் போண்டாமணி என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
போண்டாமணிக்கு சிறுநீரகங்கள் பாதிப்பு ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன், விஜய் சேதுபதி, தனுஷ் போன்றவர்கள் அவரது மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி செய்தனர். அவர், டயாலைசிஸ் செய்துக்கொண்டு வாய்ப்பு கிடைத்த படங்களில் நடித்து வந்தார். அதிமுக அபிமானியான அவர், அதிமுக பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போண்டா மணி மறைவு குறித்து நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, போண்டா மணி அனைத்து முன்னணி நடிகர்களுடனும் தமிழ் சினிமாவில் நடித்தவர். மக்கள் மத்தியில் நல்ல நடிகராக பெயர் பெற்றவராக இருந்தார். அவரது மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது.
சினிமாவில் நிறைய சம்பாதித்தும் அவர் அதை சேமித்து வைக்கும் பழக்கம் இல்லாதவராக வாழ்ந்துவிட்டார். அதனால் வாடகை வீடு, வறுமையான குடும்பம் என்ற நிலையில்தான் இருந்தார். அவரது மனைவி ஒரு நிரந்தர நோயாளி. வீட்டில் அவர் சமைக்க முடியாதவர் என்பதால் போண்டாமணி எப்போதும் ஓட்டலில்தான் சாப்பிடுவார். குடும்பத்துக்கும் ஓட்டலில் உணவு வாங்கி கொடுப்பார்.
அவர் இறந்த நாளன்று, காலையில் டயாலைசிஸ் செய்ய வேண்டும் என்று அவன் பையன் கூப்பிட்ட போது, நாளைக்கு செய்து கொள்ளலாம் என மறுத்திருக்கிறார் போண்டாமணி. அன்று இரவே மயக்கமடைந்து கீழே விழுந்தள்ளார். மருத்துவமனையில் டாக்டர்களும் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அன்று காலை அவர் டயாலைசிஸ் செய்திருந்தால் இறந்திருக்க மாட்டார் என கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.





