தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாரதிராஜா. கல்லையும் நடிக்க வைக்கும் அற்புத கலைஞர். சினிமாவை யதார்த்தமான வாழ்க்கை முறைக்குள் கொண்டு வந்தவர். கிராமங்களில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை திரைப்பட சுருளுக்குள் பதிவு செய்தவர். புழுதி படர்ந்த செம்மண் காடுகளை தன் கதைக்களமாக்கி வெற்றி கண்டவர்.
இயக்குனர் பாரதிராஜா போன்ற சிறந்த படைப்பாளிகளால் தான் தமிழ் சினிமாவின் நிறம் மாறியது. சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சம் என்பதையும் தாண்டி அது வாழ்வியலை சொல்லும் அற்புத பதிவாகவும் மாறிப் போனது. மனிதர்களின் உணர்வுகளை கேமரா சிறைக்குள் பதிவு செய்து மக்கள் பார்வைக்கு கொண்டு வந்த வித்தகர்தான் பாரதிராஜா.
ஷூட்டிங் ஸ்பாட்டில் பாரதிராஜா நடித்து காட்டுவதில் 10 சதவீதம் மட்டுமே ஒரு நடிகர் அல்லது நடிகை நடித்தாலே அவர்களது நடிப்பு சிறப்பு என்று பாராட்டப்படும் என்கிற அளவுக்கு இயக்கத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் தன்னிகரற்ற ஒரு கலைஞர் அவர். அதனால்தான் கடந்த பத்து ஆண்டுகளில் அவர் பல படங்களில் நடிக்கவும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் பாரதிராஜா படங்களில் நடித்த நடிகர் நடிகைகள் பலரும் இன்று தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற உச்ச நட்சத்திரங்களாக இருக்கின்றனர். பல நடிகைகள் 1980 90களில் நட்சத்திர நாயகிகளாக வலம் வந்தனர். முதல் மரியாதை அலைகள் ஓய்வதில்லை கடலோர கவிதைகள் மண்வாசனை கிழக்கே போகும் ரயில் நாடோடி தென்றல் என பாரதிராஜாவின் பெருமை பேசும் பல படைப்புகள் இன்றும் கொண்டாடப்படுகின்றன.
கடந்த 1980களில் பாரதிராஜா இயக்கத்தில் நடிகை ரேவதி நாயகியாக நடித்த படம் மண்வாசனை. இந்த படத்தில் நடிக்க ஒரு கிராமத்து நாயகனை பாரதிராஜா தேடிக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது மதுரை சென்ற அவர் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்திருக்கிறார்.
அப்போது அங்கு இருந்த வளையல்கடையில் வேலை பார்த்த ஒரு இளைஞர், இயக்குனர் பாரதிராஜாவிடம் ஆட்டோகிராப் கேட்டு நோட்டை நீட்டியிருக்கிறார். அந்த சிவந்த நிற இளம் வாலிபரை பார்த்த பாரதிராஜா, நீதான் மண்வாசனை படத்தின் ஹீரோ என்று சொல்லி நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவர்தான் நடிகர் பாண்டியன். பிறகு தமிழில் பல படங்களில் பாண்டியன் ஹீரோவாக நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





