விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 100 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள், அங்கு வைக்கப்படும் டாஸ்க் குகளில் வெற்றி பெற்று, 14 வாரங்களுக்கு மேல் தாக்கு பிடித்து இருந்து விட்டால் டைட்டில் வின்னர் ஆகலாம். ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை பெறலாம்.
இதுவரை ஆரவ், ஆரி, அஸீம், அர்ச்சனா, ரித்விகா, முகின், ராஜூ ஆகிய 7 பேர் டைட்டில் வின்னர்களாக வெற்றி பெற்றனர். இதில் சினேகன், ஐஸ்வர்யா, விக்ரமன், பிரியங்கா போன்றவர்கள் கடைசி நேரத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தது, பார்வையாளர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது.
இந்த நிகழ்ச்சியை பொருத்த வரை முதல் இரண்டு சீசன்களில் நிறைய டாஸ்க்குகள் நடத்தப்பட்டு, பிக்பாஸ் நிகழ்ச்சி, பெரிய அளவில் பார்வையாளர்களை கவர்ந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களுக்குள் ஏற்படும் சண்டை சச்சரவுகளை அதிகமாக காட்டி, அதையே பிரமோ செய்து இந்த நிகழ்ச்சியை வேறு மாதிரி கொண்டு சென்று விட்டது.
அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியை ஆண்டுதோறும் தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசன், வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வந்து, அந்த வாரம் முழுவதும் நடந்த பஞ்சாயத்துகளை விசாரித்து தீர்ப்பு சொல்வார். ஆனால், 6 சீசன்கள் வரை கமல்ஹாசன் ஒரு தொகுப்பாளராக இருந்த நிலையில், 7ம் சீசனில், பிரதீப் ஆண்டனியை வெளியேற்றிய வகையில், கடுமையான விமர்சனத்தில் சிக்கினார்.
இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் துவங்கி, 3 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து நடக்க இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் இப்போதே துவங்கி விட்டதாகவும், 8வது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தேர்வு குறித்தும் விஜய் டிவி தரப்பில் ஆலோசனைகள் நடந்து வருகிறது.
இந்த முறை, ராஜ்ய சபா எம்பி ஆக கமல்ஹாசன் பதவியேற்கும் பட்சத்தில், இந்த சீசன் 8 பிக்பாஸ் நிகழ்ச்சியை வழக்கம்போல் கமல் தொகுத்து வழங்குவாரா, அல்லது வேறு பிரபல தொகுப்பாளர் யாரேனும் வருவார்களாக என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் 7வது சீசனிலேயே கமல் கடும் விமர்சனத்தில் சிக்கிய நிலையில், இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியை தவிர்க்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால், ரூ. 150 கோடி சம்பளத்தை அப்படி கை நழுவ விடுவாரா, என்ற கேள்வியும் எழுந்துள்ளது.





