விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று மாலை 6 மணி அளவில் கோலாகலமாக துவங்கியது. நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி, பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி அனுப்பி வைத்தார். கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், நேற்று 8வது சீசனில் முதல் நாள் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி, பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று வீட்டுக்குள் இருந்த ஒவ்வொரு பகுதிகளையும் பார்த்து அந்த பகுதிகள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கம் அளித்து பேசினார்.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக பேட்மேன் என அழைக்கப்படும் தயாரிப்பாளர் ரவீந்திர் வீட்டுக்குள் சென்றார். அதைத்தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி விஜய் சேதுபதி வீட்டுக்குள் அவர்களை அனுப்பி வைத்தார். முன்னதாக அவர்களது அறிமுக வீடியோ காட்டப்பட்டது.
வழக்கமாக கமல்ஹாசன் பேசும் பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, நடிகர் விஜய் சேதுபதி மிகவும் கேஷுவலாக எந்தவித வார்த்தை ஜாலங்களும் காட்டாமல் மிகவும் எதார்த்தமாக, வெளிப்படையாக பேசி நிகழ்ச்சியை கொண்டு சென்றது பார்வையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் கரகோஷத்தையும் பெற்றது.
பிக்பாஸ் சீசன் 8 முதல் நாளில், போட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் முதல் நிகழ்ச்சியிலேயே அவர்களை குத்திக் காட்டும் வேலையை நடிகர் விஜய் சேதுபதி மிக அழகாக நேற்று செய்தது பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. குறிப்பாக போட்டியாளராக வந்த நடிகர் ரஞ்சித்தை அறிமுகப்படுத்திய போது அது அப்பட்டமாக வெளிப்பட்டது.
நேற்று பிக்பாஸ் சீசன் 8ல் துவக்க நாளில் வீட்டுக்குள் நுழைந்த போட்டியாளர்கள் விவரம் வருமாறு; பேட்மேன் என அழைக்கப்படும் தயாரிப்பாளர் ரவீந்தர், மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனா, நடிகை தர்ஷா குப்தா, பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் ரம்யா என் எஸ் கே வின் கணவர் சத்யா, தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஹீரோ தீபக், ஆர்ஜே மற்றும் நடிகையான ஆனந்தி ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.
மேலும் குக் வித் கோமாளி புகழ் சுனிதா, கானா பாடல்கள் ஜெப்ரி, நடிகர் ரஞ்சித், சீரியல் நடிகை பவித்ரா ஜனனி, நடிகை மற்றும் மாடல் சௌந்தர்யா நஞ்சுண்டன், பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோ அருண் பிரசாத், சீரியல் நடிகை தர்ஷிகா, பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்த விஷால், செல்லம்மா சீரியல் கதாநாயகி அன்ஷிதா, செல்லம்மா சீரியல் கதாநாயகன் அர்னவ், தமிழ் பேச்சாளர் முத்துக்குமரன், விஜய் டிவி தொகுப்பாளர் மற்றும் கோலமாவு கோகிலா நடிகை ஜாக்லின் என மொத்தம் 18 பேர் நேற்று பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக உள்ளனர்.





