விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது. நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சி தொகுப்பாளராக பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டுக்குள் 100 நாட்களுக்கு மேல் செலிபரட்டிகள் இருப்பார்கள். அப்போது அங்கு பலவிதமான டாஸ்க்குகள் நடத்தப்படும். அந்த போட்டிகளில் ஜெயிப்பவர்கள், அந்த வாரம் மட்டும் வீட்டின் தலைவராக இருக்கலாம்.
அப்படி தலைவர் ஆனவரை அந்த வாரம் எலிமினேட் செய்யக் கூடாது. அதே போல் வீட்டுக்குள் 15 பேர் முதல் 20 பேர் வரை போட்டியாளர்கள் அனுமதிக்கப்படும் நிலையில், வாரந்தோறும் ஒருவர் பார்வையாளர்கள் அளிக்கும் ஓட்டுகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவர். கடைசியில் யார் டைட்டில் வின்னரோ அவருக்கு ரூ. 50 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
இதுவரை விஜய் டிவியில் 8 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இதில் நடிகர் கமல்ஹாசன் 7 சீசன்களை தொகுத்து வழங்கினார். இடையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது 2 வாரங்கள் மட்டும் சனி ஞாயிறு தினங்களில் நடிகை ரம்யாகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 24 மணி நேர பிக்பாஸ் ஒளிபரப்பில் நடிகர் சிம்பு பங்கேற்றார்.
இதற்கிடையே கடந்த 2024ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். கமல் அளவுக்கு நடிகர் விஜய் சேதுபதி பேச்சாற்றல் மிக்கவர் இல்லை என்றாலும், யதார்த்தமாக பேசுகிறார். கமலிடம் இருக்கும் பூசி மெழுகும் தன்மை இவரிடம் இல்லை என்ற விமர்சனமும் எழுந்தது. இனி பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக விஜய் சேதுபதியே தொடர்வார் என்றும் விஜய் டிவி நிர்வாகம் கடந்தாண்டே அறிவித்து விட்டது.
நடப்பு ஆண்டு 2025க்கான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகின்றன. பிக்பாஸ் சீசன் 9 நடிகர் விஜய் சேதுபதிதான் தொகுத்து வழங்க உள்ளார். இந்த முறை சினிமா மற்றும் டிவி சீரியல் நடிகர்கள் நடிகைகள் விளம்பர மாடல்கள் யூடியூப் பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. அதனால் இந்தமுறை வழக்கத்தை விட பிக்பாஸ் வீட்டுக்குள் சம்பவங்கள் அனல் பறக்கலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய ஆரம்பத்தில் ஜூன் மாதம் துவங்கி அக்டோபர் மாதம் வரை நடத்தப்பட்டது. அடுத்து கொரோனா தொற்று பரவிய காலத்தில் அதை அக்டோபர் மாதம் துவங்கி ஜனவரி மாதம் வரை என மாற்றிவிட்டனர். ஆனால் இந்த முறை செப்டம்பர் மாதமே துவங்கி டிசம்பர் மாதமே முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்த முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.





