தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநராக, சிறந்த நடிகராக புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ். இந்திய அளவில் சிறந்த கதை ஆசிரியர் என்றால் அது கே. பாக்யராஜ் மட்டுமே என்ற பெருமைக்குரியவர். 1980களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர். எம்ஜிஆரால், தனது கலையுலக வாரிசு கே. பாக்யராஜ் என அறிவிக்கப்பட்டவர்.
முந்தானை முடிச்சு, அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, மௌன கீதங்கள், இன்றுபோய் நாளை வா, சுவரில்லாத சித்திரங்கள், தாவணி கனவுகள், எங்க சின்ன ராசா, ராசுக்குட்டி என கே பாக்யராஜ் இயக்கி நடித்த படங்கள், இப்போது பார்த்தாலும் காட்சிக்கு காட்சி ரசிக்கும் அளவுக்கு சிறந்த படைப்புகளாக இருக்கின்றன.
இப்போதும் குணச்சித்திர வேடங்களில் நடித்துவரும் கே பாக்யராஜ், தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக இருந்து வருகிறார். சமீபத்தில் ஒரு பரபரப்பான வீடியோவை, கே பாக்யராஜ் பேசி வெளியிட்டு இருந்தார். தனது எக்ஸ் தளத்தில், நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற தலைப்பில் அவரே பேசிய அந்த வீடியோ வைரலானது.
அதில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் அருகே உள்ள பவானி ஆற்றில், அடிக்கடி சிலர் மூழ்கி நடக்கும் உயிரிழப்பு சம்பவங்கள் தற்செயலானது அல்ல. ஆற்றில் மூழ்கி குளிப்பவர்களை மர்ம நபர்கள் இழுத்து, அமுக்கி கொலை செய்துவிட்டு, பின் இறந்தவர் உடலை தேட பணம் கேட்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் கே பாக்யராஜ் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது. இதற்கு காவல் துறை தரப்பில் உண்மை கண்டறியும் குழு சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்த தகவல்கள் அடிப்படையில் ஆதாரம் அற்றவை என்றும் குறிப்பிட்டுள்ளது.
பவானி ஆற்று பகுதியில் இதுபோன்ற கொலை சம்பவங்கள் நடந்ததாக இதுவரை எந்த வழக்கும், மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பதிவாகவில்லை. மேட்டுப்பாளையம் உயிர் காக்கும் காவல் படை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உருவாக்கப்பட்டது. இதனால் கடந்தாண்டில் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக குறைந்தது. எனவே, இதுபோன்ற வதந்திகள் ஆதாரமற்றவை. வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.





