ஒரு திரைப்படம் வந்து விட்டால் போதும், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அந்தப் படத்தின் நிறைகளைவிட குறைகளை தேடி கண்டுபிடித்து பேச ஆரம்பித்து விடுவார் என ரசிகர்கள் இன்றளவும் அவர் மீது விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு முழுக்க முழுக்க காரணம் அவர் சினிமா விமர்சனம் செய்யும் முறைதான். தனியார் யூ டியூப் சேனல் நடத்தும் அவர் படத்தை விமர்சனம் செய்கிறேன் என்று கூறி, தனது வாய்க்கு வந்த வார்த்தைகளை எல்லாம் உபயோகித்து நடிகரையும் அந்த படத்தின் இயக்குனரையும் மட்டம் தட்டி பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆரம்பத்தில் அஜித் ரஜினி படங்களை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்ததன் மூலம், பலராலும் அறியப்பட்டதால் அந்த யுக்தியையே தற்போது வரை பயன்படுத்தி வருகிறார்.

ப்ளூ சட்டை மாறன் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், அவரின் திரை விமர்சனத்தை கேட்பதற்கு என்றே ஒரு தனி கூட்டம் இருக்கிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள அவர், ஒரு படத்தை சகட்டுமேனிக்கு திட்டுவதால் மட்டும் தான் தனது சேனலுக்கு நிறைய பேர் வருகிறார்கள் என்பதை உணர்ந்து, அந்த பாணியையே தொடர்ந்து வருகிறார். அதேசமயம் படத்தை தாண்டி அவர் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளை உருவக்கேலி செய்வது இங்கு பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட நடிகரின் ரசிகர்கள், அவரை இணையத்தில் வறுத்தெடுப்பதையும் அவ்வப்போது காண முடிகிறது.
ஒவ்வொரு திரைப்படமும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது போலவே அவர் பேசி வருவதாகவும், அவர் இயக்கிய ஆன்ட்டி இந்தியன் ஒரு குப்பை திரைப்படம் என்றும் ரசிகர்கள் ஆதங்கத்துடன் கூறி வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத ப்ளூ சட்டை மாறன், ஒவ்வொரு திரைப்படம் வரும்போது எல்லாம் தனது வித்தையை இறக்கி கொண்டுதான் இருக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் கையில் எடுத்திருப்பது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம்தான்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஷ்கின், சரிதா யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் கோழையாக இருக்கும் சிவகார்த்திகேயன், ஒரு சம்பவத்திற்கு பிறகு மாவீரனாக மாறுவதாகவும், அவருக்கு மேலே இருந்து ஒரு குரல் கேட்டுக் கொண்டே இருப்பதாகவும் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குரலுக்கு விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்துள்ளார் என்பதும் இங்கு அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் மாவீரன் திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ஒரு கொரியன் படத்தின் காபிதான் என்று ப்ளூ சட்டை மாறன் அடித்துக் கூறியுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு மேல இருந்து குரல் கேட்பது போல் எடுக்கப்பட்டிருப்பது, stanger then fiction என்னும் ஆங்கிலத் திரைப்படத்தின் தழுவல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவு, சிவகார்த்திகேயன் ரசிகர்களை எரிச்சல் அடையச் செய்துள்ளது.
எப்போது பார்த்தாலும் உலக சினிமாவையே தூக்கி கொண்டு வரும் ப்ளூ சட்டை மாறன், தன்னை பெரும் சினிமா ஞானி போல் கருதுவதாகவும், ஆனால் அவருக்கு ஒரு படத்தை கூட உருப்படியாக எடுக்க தெரியவில்லை என்றும் கடுமையாகச் சாடியுள்ளனர். மேலும் படம் முடிந்த பிறகு மடோன் அஸ்வின் தான் எங்கிருந்து இந்த கதையை எடுக்க இன்ஸ்பயர் ஆகினேன் என்பதை தெளிவாக அவரே பட்டியல் போட்டு கொடுத்திருப்பதாகவும், பிறகு எதற்கு ப்ளூ சட்டை மாறன் இப்படி ஆட்டம் போடுகிறார் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ப்ளூ சட்டை மாறனுக்கும் ரசிகர்களுக்கும் இடையேயான மோதல் இணையத்தில் வழுத்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





