ரஜினிகாந்த் நடித்த “ஜெயிலர்” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் எப்போதும் ஒரு திரைப்படத்தை மிகவும் சர்ச்சையாக விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறன், “ஜெயிலர்” திரைப்படத்தையும் அவ்வாறு மனம் போன போக்கில் பொரித்துத் தள்ளியுள்ளார். அவர் கூறியது பின் வருமாறு,

“ஜெயிலர் படத்தின் கதை ஒரு சீரீயஸான ஆக்சன் படத்திற்கான கதையாக இருந்தாலும் இந்த படம் ஒரு டார்க் காமெடி படம் என்றுதான் படக்குழுவினர் புரொமோட் செய்திருந்தார்கள். வழக்கமாக டார்க் காமெடி என்றால் படத்தில் உள்ள கேரக்டர்கள் எல்லாம் சீரீயஸாக ஒரு வேலையை பார்த்துக்கொண்டிருப்பார்கள். படம் பார்க்கும் நமக்கு சிரிப்பு வரும்
ஆனால் ஜெயிலர் படத்தில் வருபவர்கள் எல்லாம் காமெடி செய்துகொண்டிருக்கிறார்கள், படம் பார்க்கும் நாம்தான் சீரீயஸாக ஆகிவிடுகிறோம். டார்க் காமெடி செய்கிறேன் என்ற பெயரில் இவர்கள் செய்ததுதான் பெரிய காமெடி ஆகிவிட்டது.

கதை ஒரே நேர்கோட்டில் போகாமல் எங்கெங்கோ போகிறது. ஒரு கட்டத்தில் உண்மையான வில்லன் யார் என்று காட்டும்போது நிச்சயமாக அந்த இடத்தில் ஒரு அதிர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. அந்த இடத்தில் இருந்தாவது படத்தை டேக் ஆஃப் செய்து கொண்டுப்போய் இருக்கலாம். ஆனால் அதற்குள் ஆடியன்ஸ் டயர்டாகி படுத்து ஐசியுவுக்கே போய்விடுகிறார்கள். தண்ணீர் தெளித்து எழுப்பிவிடும் கண்டிஷனில் எல்லாம் இல்லை. கோமாவிற்கே போய்விடுகிறார்கள்” என விமர்சித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற விஷயம் ரஜினிகாந்திற்கு தெரியாமல் போய்விட்டது போல. இவர் இவ்வளவு உயரத்திற்கு வளர்ந்ததற்கு காரணம் அவரது ரசிகர்கள்தான். இன்றைக்கு அதளபாதாளத்திற்கு போனதற்கு யார் காரணம்.

அவரேதான் காரணம். இந்த சூழலை உருவாக்கியது இவரேதான். தூத்துக்குடியில் உடைமைக்காகவும் உரிமைக்காகவும் போராடிய மக்கள் 13 பேரை பறிகொடுத்தபோது அங்கே போய் ஆறுதல் சொல்வதாக போய், போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவிவிட்டார்கள், அதனால்தான் இந்த பிரச்சனை என்றார். யார் அந்த சமூக விரோதிகள் என்று கேட்டபோது அதனை சொல்லமாட்டேன் என்று வீட்டிற்கு வந்துவிட்டார்.
அதன் பின் நீதிமன்றமும் அதனை கேட்டபோது, தவறாக சொல்லிவிட்டேன் மன்னித்துவிடுங்கள் என்று கூறிவிட்டார். அப்போது விழுந்த அடிதான், இப்போது வரை எழுந்திருக்க முடியவில்லை” என்று ரஜினிகாந்தை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





