நடிகர் விஜயகாந்த் சமீபத்தில்தான் உடல் நலக்குறைவால் காலமானார். பலரும் அவரது நினைவிடத்துக்கு சென்று தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் அவரது நினைவிடத்துக்கு தன் தாயாருடன் சென்று நடிகர் ராகவா லாரன்ஸ் அஞ்சலி செலுத்தினார். பிறகு சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கும் லாரன்ஸ் சென்றார்.
நேற்று இதுகுறித்து வீடியோ பதிவை வெளியிட்ட ராகவா லாரன்ஸ், தமிழ் சினிமா வளர்ச்சிக்கும், பல நடிகர்களின் வளர்ச்சிக்கும் நிறைய உதவிகளை விஜயகாந்த் செய்திருக்கிறார். நிறைய தர்ம காரியங்களையும் அவர் செய்தவர். அவர் நடித்த கண்ணுப்பட போகுதய்யா படத்தில், மூக்குத்தி முத்தழகி பாட்டுக்கு நான்தான் டான்ஸ் மாஸ்டராக இருந்தேன் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய லாரன்ஸ், விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடித்து வருகிறார். அவர் சினிமாவில் வளர வேண்டும். அதற்கான உதவியை நான் செய்ய விரும்புகிறேன். ஏனெனில் இது விஜயகாந்தின் மீது நான் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் ஒரு செயலாக அமையும். அதனால் அவரது ஆத்மா சாந்தியடையும்.
சண்முக பாண்டியன் இப்போது நடித்து வரும் படத்தில் டான்ஸ், பைட், சீன் என எதுவாக இருந்தாலும் நான் கேமியோ ரோல் செய்ய தயாராக இருக்கிறேன். படக்குழு ஆசைப்படுவதை நான் செய்து தருகிறேன். டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும் சண்முகபாண்டியனுடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன், என்று வீடியோவில் தெரிவித்திருந்தார்.
ராகவா லாரன்ஸ் மாஸ்டர் சொன்ன இந்த பதிவு, பலருக்கும் நெகிழ்ச்சியை தந்தாலும், கேப்டன் இறந்த பிறகு இந்த உதவியை செய்ய இவர் முன் வந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் தவிர இவரது மற்ற படங்கள் எதுவுமே சரியாக ஓடவில்லை. சந்திரமுகி 2 படம் கூட ஊத்திக்கொண்டது என்பது ரசிகர்கள் அறிந்த விஷயம்தான்.
இதுகுறித்து தனது பக்கத்தில் டிவிட் செய்துள்ள ப்ளு சட்டை மாறன், அடடா, இந்த உதவியை விஜயகாந்த் இருந்திக்கும்போதே செய்திருக்க வேண்டியதுதானே, ராகவா லாரன்ஸ் நடிச்சாலே படம் ஓடாது, இதுல கேமியோ ரோல் வேறயா என பங்கம் செய்து கலாய்த்துள்ளார். இதற்கு கீழே நெட்டிசன் ஒருவர், லாரன்ஸ் அதை மட்டும் செய்து விடாதீர்கள். பாவம், அந்த பையன் நல்லா வரட்டும் என்றும் நக்கலடித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.





