இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நேற்று வெளியான படம் விடுதலை 2 இந்த படத்தில் விஜய் சேதுபதி மஞ்சு வாரியார் சூரி கென்னி கிஷோர் சேத்தன் பவானி ஸ்ரீ கௌதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார். கலிய பெருமாள் வாத்தியார் என்ற கேரக்டரை மையப்படுத்தி இந்த படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது.
கடந்தாண்டு மார்ச் மாதம் விடுதலை முதல் பாகம் வெளியான நிலையில், படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. குறிப்பாக காமெடி நடிகர் சூரி, நாயகனாக இந்த படத்தில் அறிமுகமாகியிருந்தார். கான்ஸ்டபிள் குமரேசன் கேரக்டரில் அவரது நடிப்பில் மிகவும் யதார்த்தமாக இருந்தது.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் செவிகளில் இனித்தன. குறிப்பாக வழிநெடுக காட்டுமல்லி பாடலை உச்சரிக்காத உதடுகளே இருக்க முடியாது என்னும் அளவுக்கு அந்த பாடல் டிரண்டிங் ஆகி வைரலானது. சில காட்சிகளில் வந்தாலும் வாத்தியார் கேரக்டரில் விஜய் சேதுபதி மிரட்டியிருந்தார்.
இந்நிலையில், 20 மாதங்களுக்கு பிறகு விடுதலை 2 படம் நேற்று வெளியானது. முதல் நாளில் தமிழ்நாட்டில் 7 கோடி ரூபாய், உலகளவில் ரூ. 12 கோடி வசூலித்துள்ள இந்த படத்தை ஒரு சிலர் வெகுவாக பாராட்டினாலும் ஒரு தரப்பினர் எதிர்மறையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முதல் பாகம் அளவுக்கு 2ம் பாகம் திருப்தியாக இல்லை என்றே கூறுகின்றனர்.
இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, விடுதலை பாகம் 1ல் ஸ்ட்ராங்காக இருந்த எந்த கேரக்டரும் இந்த 2ம் பாகம் படத்தில் நம் மனதில் நிற்கவில்லை. சூரி கூட பத்தோடு 11 ஆகத்தான் இந்த படத்தில் வருகிறார். முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டிய விஜய் சேதுபதி கேரக்டரையும் ஸ்ட்ராங்காக எழுதவில்லை.
காதுல ரத்தம் வர்ற வரைக்கும் அவர் கருத்து சொல்லிக்கிட்டே இருக்கார். படத்துல ஹீரோயின் போர்ஷன் தேவையே இல்ல. முதல் பாதி கூட ஓகே பார்க்கலாம். ஆனா போகப் போக போராட்டம் போராட்டமுன்னு சொல்லி ரொம்ப போராடிட்டாங்க. படம் பார்க்கிறதே போராட்டமா இருக்கு. வெற்றிமாறன் இயக்கிய படத்திலேயே இதுதான் ரொம்ப சுமாரான படம் என்று விடுதலை 2 படம் குறித்து தனது விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.





