தமிழ் சினிமா நடிகர்களில் கமல்ஹாசனுக்கு அடுத்ததாக நடிப்பில் பெயர் வாங்கியவர் சியான் விக்ரம். அழுத்தமான நடிப்பாற்றல் கொண்டவர். தன் கேரக்டருக்காக அதிகளவில் மெனக்கெடுபவர். தன் கதாபாத்திரம் சிறப்பாக வெளிப்பட உயிரை கொடுத்து நடிப்பவர் என்று பாராட்டப்படுபவர்.
அப்படி அவரது மிகச் சிறந்த நடிப்பில் உருவான சேது, காசி, ஐ, அந்நியன், பிதாமகன், ராவணன் போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. அதே போல் இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் தங்க வயல் அடிமை தொழிலாளர்களாக வாழ்ந்த மக்களை பற்றிய கதையில் விக்ரம் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், தங்கலான் என்ற கேரக்டரில் சியான் விக்ரம் வாழ்ந்து காட்டியிருக்கிறார், அவரது அசுரத்தனமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தாலும் படத்தின் கதை குறித்த விமர்சனங்களில் பா ரஞ்சித் ஏமாற்றி விட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இதுகுறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் கூறியிருப்பதாவது, கோலார் தங்க வயலில் இருந்து தங்கத்தை எடுக்க தங்கத்தை எடுக்க வட ஆற்காடு மாவட்ட மக்களை அழைத்து செல்லப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள், தங்கத்தை எடுக்க அவர்கள் சிந்திய ரத்தம், உயிர்பலியை போன்ற அந்த வலி, வேதனை தான் இந்த படம் என்று நினைத்தால், அதுதான் இல்லை.
இயக்குனர் பா ரஞ்சித் இதில் தனது அறிவாளித்தனத்தை காட்டியிருக்கிறார். கோலார் தங்க வயல் என்ற ரத்த சரித்திரத்தை படமாக எடுக்காமல் வருணாசிரமம், சிறுதெய்வ வழிபாடு, பெருமாள், ராமானுஜம், கிறிஸ்துவ மதம், முஸ்லிம் மதத்தில் திப்பு சுல்தான் வரை இழுத்து வைத்துக்கொண்டு தன்னுடைய ஜாதி மத நிலைப்பாட்டை உருட்டி வைத்திருக்கிறார் பா ரஞ்சித்.
படத்தின் கதையை சொதப்பி விட்டார். பரதேசி, ஆயிரத்தில் ஒருவன் படங்களை விஷூவலில் அப்படியே எடுத்திருக்கிறார். படம் பிடிக்கும், பிடிக்காது என்பதை விட படமே புரியாது என்றால் அது யார் தவறு. படமும் புரியல, வசனமும் புரியல என ரசிகர்கள் புலம்புகின்றனர். சரியில்லாத கதை, வலுவில்லாத திரைக்கதை படத்தை ஜவ்வு மிட்டாயாக மாற்றி விட்டது. ஜிவி பிரகாஷ் இசையால் படத்தை காப்பாற்ற முயற்சித்திருக்கிறார். ரத்த சரித்திரம் என நினைத்து தங்கலானை பார்த்தால், தொங்கலாமுன்னு தோணிடும் என்று விளாசியிருக்கிறார் விமர்சகர் ப்ளு சட்டை மாறன்.





