- Advertisement -
Homeபொழுதுபோக்குஇசை நிகழ்ச்சி விவகாரம்; ஏ ஆர் ரகுமானின் விளக்கத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்... இவரது...

இசை நிகழ்ச்சி விவகாரம்; ஏ ஆர் ரகுமானின் விளக்கத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்… இவரது கருத்தும் சரிதானே என ஆதரிக்கும் இணையவாசிகள்…

- Advertisement -

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி, சென்னை பனையூரில் கடந்த மாதம் 12ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் அன்றைய தேதியில், சென்னையில் கன மழை பெய்ததால் நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக நிகழ்ச்சி நடைபெறாமல் போனதால் ரஹ்மானின் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

இந்த நிலையில், இசை நிகழ்ச்சி கைவிடப்படவில்லை என்றும், செப்டம்பர் 10 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏ ஆர் ரகுமான் அறிவித்தார். மழை பெய்தாலும் நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு, ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண ஏராளமானோர் ஆர்வமாய் இருந்தனர். அதன்படி கோலாகலமாகவும் நிகழ்ச்சி தொடங்கியது.

- Advertisement -

ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், சரிவர வசதிகளை செய்யாததால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. டிக்கெட் வாங்கியவர்களில் பெரும்பாலானோர் வெளியில் காத்து கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சரியான பார்க்கிங் வசதியை செய்து கொடுக்காததால் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. டிக்கெட் எடுத்தவர்களையும் உள்ளே அனுமதிக்காததால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

கூட்ட நெரிசலில் பெண்கள் கதறி அழுத வீடியோ வைரலாக, ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியை பலரும் குறை கூறினர். 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் டிக்கெட் எடுக்கும் நிகழ்ச்சியை காண முடியவில்லை என்று ஆதங்கப்பட்டனர். கடைசி நேரத்தில் பணத்திற்கு ஆசைப்பட்டு கூடுதல் டிக்கெட்களை விற்பனை செய்ததே இதற்குக் காரணம் என்று புகார் எழுந்தது. இது மட்டுமல்லாமல், நிகழ்ச்சி காரணமாக ஓ எம் ஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

- Advertisement -

முதல்வரின் கான்வாய் வாகனமும் நெரிசலில் சிக்கியதாக தகவல் வெளியானது. இதனால், நிகழ்ச்சி ஏற்பாட்டளரிடம் தாம்பரம் காவல் ஆணையர் விசாரணை நடத்தினார். இது குறித்து விளக்கம் அளித்த ஏ ஆர் ரகுமான், இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்பதாகவும், கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு ஏற்ற மாதிரி சென்னையை தகவமைக்க வேண்டும் என்றும் கூறினார். டிக்கெட்டின் நகலை அனுப்புபவர்களுக்கு சரியான பதில் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் ஏ ஆர் ரகுமானின் விளக்கத்தை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். சென்னையை தகவமைக்க வேண்டுமா? ஓஎம்ஆர் சாலை முழுக்க மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவது அனைவருக்கும் தெரியும். அப்படி இருந்தும் அதை ஒட்டிய பகுதிகளில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது சிந்தனையற்ற செயல். இதனால் சென்னை நகர கட்டமைப்பின் மீது தவறல்ல. நிகழ்ச்சி நடத்திய உங்கள் ஏற்பாட்டாளர்கள் மீது தான் தவறு என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்