தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் பிற மாநில நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இங்குள்ள ஹீரோக்களுக்கு இணையான வில்லன் கதாபாத்திரம் வேண்டும் என்பதால், தெலுங்கு, மலையாளம், இந்தி பட உலகில் இருந்து ஆகப்பெரும் நட்சத்திரங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்கின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால் ஆகிய இரு பெரும் தலைகளை களம் இறக்கினார் நெல்சன். ரஜினிக்கு மட்டும் இல்லாமல், கன்னட பிரபலம் சிவராஜ் குமாருக்கும், மலையாள ஹீரோ மோகன் லாலிற்கும் கிளைமேக்ஸில் அசத்தலான காட்சியை அவர் வைத்திருந்தார். இதனால், தமிழ்நாட்டை தாண்டி கர்நாடகா, ஆந்திரா, கேரளாவிலும் ஜெயிலர் ஹிட் அடித்தது.
இதேபோல், தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் லியோ படத்தில், பாலிவுட் ஜாம்பவான் சஞ்சய் தத்தை அழைத்து வந்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு லியோவில் சஞ்சய் தத்தின் ரோல்லை படக்குழு வெளியிட்டது. அதில் அவர் ஆண்டனி தாஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த வரிசையில் தற்போது, பாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் அமீர் கானும் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலிவுட்டில் முக்கிய தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம்தான், அமீர் கானை தமிழ் சினிமாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது தளபதி 68 மற்றும் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் என இரண்டு முக்கிய படங்களை தயாரித்து வருகிறது.
இந்த நிலையில்தான், அந்த தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த ஐஸ்வர்யா கல்பாத்தி, அமீர் கானை சந்தித்துள்ளார். அப்போது அமீர் கான் தமிழில் படம் நடிப்பது பற்றி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தளபதி 68-ல் இணையலாம் அல்லது தனிஒருவன் 2-ல் ஜெயம் ரவிக்கு வில்லனாகலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.





