துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார். துணிவு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்திலேயே, அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது. இதனை தானே இயக்கப் போவதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்தார். பட தயாரிப்பு நிறுவனமான லைகாவும் இதனை உறுதி செய்தது.
நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கியிருந்த விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து எந்த மாதிரியான படத்தை இயக்கப் போகிறார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குனர் விக்னேஷ் சிவன் இருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால், படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகினார்.
இதன் பிறகு அஜித்தை வைத்து யார் இயக்கப் போகிறார்கள் என்று கேள்வி எழுந்த நிலையில், மகிழ் திருமேனி என பதிலளித்தது லைகா நிறுவனம். தடையற தாக்க, தடம், மீகாமன் என க்ரைம் திரில்லர் படங்கள் எடுப்பதில் கெட்டிக்காரரான அவர், அஜித்துடன் இணைவதாக அறிவிக்கப்பட்டதால் இந்த புதுமையான ஜோடிக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
படத்தின் டைட்டிலும் விடாமுயற்சி என்று அறிவிக்கப்பட்டது. அதேசமயம், புதுமையான கூட்டணி என்றாலும் இதிலும் வி சென்டிமென்ட் தொடர்வதா என கேள்வி எழுந்தது. இதைத்தொடர்ந்து படத்தில் அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் கால் கடுக்க காத்திருக்க, எந்த ஒரு பதிலும் கிடைக்கவே இல்லை. அஜித் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி விடாமுயற்சி அறிவிக்கப்பட்டதே, அதன் பிறகு என்ன ஆனது என ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.
இது ஒரு பக்கம் இருக்க, எதுவுமே நடக்காதது போல் பைக்கை தூக்கிக்கொண்டு ஃபாரின் கிளம்பினார் ஏ கே. உலகத்தின் பல்வேறு பகுதியிலும் அவர் பைக்கை எடுத்துக் கொண்டு ஊர் சுற்ற, விடாமுயற்சி எந்தக் கதியில் இருப்பது என்று பலருக்கும் தெரியாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் படம் டிராப் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதை முற்றிலுமாக மறுத்த தயாரிப்பு நிறுவனம், நிச்சயம் விடாமுயற்சி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்று உறுதிப்படக் கூடியது.
இந்த நிலையில் பைக்கை ஓரங்கட்டி விட்டு, படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் அஜித். முதல் கட்டமாக, விடாமுயற்சியின் சூட்டிங் இந்த மாதம் இறுதியில் துபாயில் தொடங்குகிறது. இதில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிப்பது உறுதியாகி உள்ளது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இதுபோக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் படத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மகிழ்திருமேனிக்கு கைவந்த கலையான க்ரைம் திரில்லர் ஜானரில் இந்தப் படம் எடுக்கப்படுவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.





