தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நாகர்ஜுனா. இவர் தமிழிலும் உதயம், தோழா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் கூலி படத்திலும் முக்கிய கேரக்டரில் நாகார்ஜுனா நடிக்கிறார். இவரது மகன் நாக சைதன்யாவும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
கடந்த 2017ம் ஆண்டில் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன 4 ஆண்டுகளில் இருவரும் பிரிந்து, விவாகரத்து பெற்று விட்டனர். இப்போது நாக சைதன்யா சோபிதா துலிபாலா என்ற நடிகையை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சி காங்கிரஸ் பெண் அமைச்சர் கொண்டா சுரேகா சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார். அதில் நடிகர் நாகதன்யா, சமந்தா ஆகியோரது பிரிவுக்கு முன்னாள் டிஎஸ்ஆர் கட்சி அமைச்சர் கேடி இராமாராவ் தான் காரணம் என்று பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தெலுங்கு திரைப்படத்துறையை சேர்ந்த பலரும் அமைச்சர் சுரேகாவுக்கு எதிரான கடும் கண்டனங்களை தெரிவித்தனர். குறிப்பாக நாக சைதன்யாவின் அப்பா நாகர்ஜுனா, நடிகை சமந்தா, நடிகர் நாகசைதன்யா, நடிகை நானி உள்ளிட்ட பலரும் கடுமையாக கண்டித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இதையடுத்து சுரேகா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்.
எனினும் நடிகர் நாகார்ஜுனா, அமைச்சர் சுரேகா மீது கிரிமினல் அவதூறு வழக்கை ஒன்றை தொடர்ந்தார். அடுத்ததாக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு ஒன்றையும் அவர் மீது பதிவு செய்துள்ளதாக இப்போது நாகார்ஜுனா தெரிவித்துள்ளார். இது குறித்து நாகார்ஜுனா கூறுகையில், தன்னுடைய பேச்சை அமைச்சர் திரும்ப பெற்றுள்ளார். சமந்தாவிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
ஆனால் என்னிடமோ, எங்கள் குடும்பத்தினரிடமோ அவர் எந்தவிதமான மன்னிப்பையும் கேட்கவில்லை. அவர் எங்களிடம் மன்னிப்பு கேட்டாலும் வழக்கை வாபஸ் பெற மாட்டோம். இது தனிப்பட்ட விவகாரம் அல்ல, அவரது பேச்சு என்னை பற்றியும் எங்களது குடும்பத்தை பற்றியும் அதிகமாக அசிங்கப்படுத்திவிட்டது. அரசியல் லாபத்திற்காக எங்களது பெயர்களை பயன்படுத்தக்கூடாது. அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு மற்ற அரசியல்வாதிகளுக்கும் எச்சரிக்கையாக அமையும் என நம்புகிறேன் என, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் நாகார்ஜுனா தெரிவித்திருக்கிறார்.





