கோட் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக வினோத்துடன் இணைந்து இருக்கிறார். அரசியலில் மிக தீவிரமாக கவனம் செலுத்தி வரும் அவர் இதையே தனது கடைசி திரைப்படம் என்று ஏற்கனவே கூறிவிட்டார். பாடல் காட்சியுடன் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஐந்தாம் தேதி தொடங்குகிறது.
இந்த திரைப்படத்திற்குப் பிறகு முழு நேர அரசியலில் விஜய் கவனம் செலுத்த இருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்த அவர், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதே தனது இலக்கு என்று கூறியிருந்தார்.
அதற்கான பணிகளை அவர் முன்னெடுத்து வருகிறார். மிக முக்கியமாக சமீபத்தில் அவர் பெரியார் பிறந்தநாளில் அவர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதற்கு முன்பு கட்சி ஆரம்பித்த கமல்ஹாசனோ, அல்லது அரசியலுக்கு வருவதாக பேசிக் கொண்டிருந்த ரஜினிகாந்த் இவ்வாறு செய்தது இல்லை.
இப்படி தனது ஆரம்பக் காலத்திலேயே பலரும் கவனிக்கும் வகையில் விஜய் தனது காய்களை நகர்த்தி வருகிறார். மிக முக்கியமாக பார்க்கப்படுவது அவர் அரசியல் மாநாட்டில் என்ன பேசப்போகிறார் என்பதுதான். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது அரசியல் மாநாடு.
இதில் விஜய்யின் பேச்சுக்காகவும் அவர் கட்சியின் கொள்கைக்காகவும் தான் பலரும் காத்திருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க, அவரின் இறுதி படத்திற்கான வேலைகளும் விறுவிறுப்படைந்துள்ளன. கே வி என் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், ஹிந்தி நடிகர் பாபி தியோல் வில்லனாக வருகிறார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இந்த நிலையில் படத்தில் பிரியாமணி நடிப்பதாக பட குழு இன்று அறிவித்தது. தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன், நடிகர் நரேன் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடைசியாக பிரகாஷ்ராஜ் இந்த திரைப்படத்தில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரே நாளில் நான்கு கதாபாத்திரங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.





