முன்பெல்லாம் நல்ல கற்பனை வளத்துடன் இருந்த இயக்குனர்கள் புதிய புதிய கதைகளை சிந்தித்து அதை திரைக்கதையாக மாற்றி திரைப்படங்களாக திரைக்கு கொண்டு வந்தனர். அதனால் தான் இயக்குனர்கள் பாரதிராஜா கே பாக்யராஜ் பாலு மகேந்திரா கே பாலசந்தர் மகேந்திரன் ஸ்ரீதர் போன்ற இயக்குனர்கள் இன்றும் கொண்டாடப்படுகின்றனர்.
ஆனால் இப்போதெல்லாம் ஏற்கனவே வந்த ஹிட் படங்களின் கதையை சுட்டு தருகின்றனர். பல இயக்குனர்கள் பிற மொழி படங்களின் ரீமேக் படங்களை தான் பெரிய ஹீரோக்களை வைத்து தருகின்றனர். அதே போல் ஏதேனும் பரபரப்பான வரலாற்று சம்பவங்கள் இருந்தால் அதையே தங்களது கற்பனை வளத்தில் கொஞ்சம் பொய்களை கலந்து சித்தரித்தும் திரைப்படமாக்கி விடுகின்றனர்.
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு எல்லை பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு இந்தியா – சீனா பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 38 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பேட்டில் ஆஃப் கல்வான் என்ற திரைப்படம் இந்தியில் உருவாகியுள்ளது.
இதில் பாலிவுட் நட்சத்திர நடிகர் சல்மான்கான் கர்னல் சந்தோஷ் பாபு கேரக்டரில் நடித்துள்ளார். இயக்குனர் அபூர்வா லக்கியா டைரக்ட் செய்துள்ள இந்த படத்தில் சித்ரங்டா சிங் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்திய வீரர்களின் துணிச்சலை காட்டும் விதமாக உருவாக்கியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியானது.
அப்போது சீனாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வரலாற்று உண்மைகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் குற்றம் சாட்டின. இதையடுத்து இந்த படத்தின் தலைப்பு மாத்ருபூமி; மே வார் ரெஸ்ட் இன் பீஸ் என்றும் மாற்றப்பட்டது. இந்த படம் கடந்த ஏப்ரல் 17ம் தேதி வெளியாவதாக இருந்தது. பின்னர் ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டனர்.
இந்த நிலையில் இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தற்காலிகமாக மறுத்துள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை சான்றிதழ் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதனால் இந்த படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகாது என்றும் கூறப்படுகிறது. இது சல்மான்கான் ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.





