லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ட்ரெய்லர் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. இன்று மாலை படத்திலிருந்து மூன்றாவது சிங்கிளும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி லியோ படத்தின் வைப்தான் தற்போது கோலிவுட்டில் எழுந்திருக்கிறது. படம் கண்டிப்பாக வசூல் சாதனை புரியும் என விஜய் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
ஆனால் லியோ ஒருபக்கம் தொடர்ந்து சிக்கல்களை சந்தித்துவருகிறது. அதன்படி முதலில் நா ரெடிதான் பாடல் சர்ச்சை, அடுத்து ஆடியோ லான்ச் ரத்து, அடுத்து விஜய் பேசிய கெட்ட வார்த்தை என தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. அந்த வகையில் புதிய சர்ச்சை ஒன்று லியோவை சுற்றி எழுந்திருக்கிறது. அதாவது நா ரெடிதான் பாடலுக்கு 1400 பேர் நடனம் ஆடினார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு சம்பளமே வரவில்லை என கூறினர். மேலும் காவல் துறையிலும் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து படக்குழு தொடர்ந்து அமைதி காத்து வந்தது. ஆனால் இது தவறான தகவல் சம்பளம் கொடுத்துவிட்டோம் என்று ஒருகட்டத்தில் மௌனம் கலைத்தது. இந்நிலையில் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “லியோ திரைப்படத்தின் நா ரெடிதான் பாடலில் ஆடியவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று புகார் அளிக்கும் காணொலியை நாங்கள் பார்த்தோம்.
படத்தின் ஒரு பாடலுக்கு 2,000 நடன கலைஞர்களை பயன்படுத்த இயக்குநர் விரும்புவதாக நடன அமைப்பாலர் தினேஷ் மாஸ்டர் தெரிவித்தார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக அதிகம்பட்சம் 600 பேர் மட்டுமே இருந்தனர். 1000 பேர் இருக்கும் உறுப்பினர்களாக சங்கத்தில் 400 பேர் ஏற்கனவே வெவ்வேறு படங்களில் நடனம் ஆட ஒப்பந்தமாகிவிட்டார்கள். எனவே அதிகமான நடன கலைஞர்கள் தேவைப்படும்போது முன் வரிசையில் நடன கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்களையும், உறுப்பினராக இல்லாமல் ஓரளவு நடனம் தெரிந்தவர்களை பின்வரிசையில் நிற்க வைப்பது வழக்கமான ஒன்று.
அவர்களுக்கு வழக்கமாக மூன்று வேளை உணவளித்து 1000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுவதும் வழக்கம். நா ரெடிதான் பாடலில் 1,400 உறுப்பினர்கள் அல்லாதவர்களை வைத்து சென்னை பனையூரில் உள்ள ஆதித்யா ஸ்ரீராம் ஸ்டூடியோவில் கடந்த ஜூன் மாதம் ஆறாம் தேதி முதல் 11ஆம் தேதி பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இவர்களுக்கு ஒரு நாளைக்கு 1,750 ரூபாய் சம்பளம் என்று முடிவு செய்து 6 நாட்களுக்கு 10,500 ரூபாய் என முடிவெடுக்கப்பட்டது.
அதனையடுத்து அனைத்து உறுப்பினர்களுக்கும் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக 94,60,500 ரூபாய் செலுத்தப்பட்டது. அதேபோல் இவர்களுக்கு ரிகர்சல் அளித்த ஒழுங்குப்படுத்தும் விதமாக சர்வீஸ் சார்ஜ் தொகை தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்துக்கும் வழங்கப்பட்டது. தற்போது ஒரு சிலர் எங்களுக்கு ஊதிய வழங்கவில்லை என்கிறார்கள். அது தவறான ஒன்று. சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சேர வேண்டிய தொகை அவர்களது சங்கத்தில் செலுத்தப்பட்டுவிட்டது. அதேபோல் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் 10,5000 ரூபாய் செலுத்தப்பட்டுவிட்டது” என்றார்.





