இப்போது தமிழ் சினிமாவில் பெஸ்டிவல் படங்கள் என்றே குறிப்பிட்டு சில படங்களை பொங்கல், தீபாவளி போன்ற காலகட்டங்களில் வெளியிடுகின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில்தான் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களே வெளியாகும். ஆனால் இதில் நடிகர் வித்யாசமின்றி எல்லா தியேட்டர்களிலுமே ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
இப்போதெல்லாம் பண்டிகை கால படங்கள் என்பது வெகுவாக குறைந்து போய் விட்டது. சுந்தர் சி போன்றவர்கள் மட்டுமே இன்னும் பெஸ்டிவல் படங்களை தருவதில் ஆர்வமாக இருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம், தொடர் விடுமுறை நாட்களில் குடும்பம், குடும்பமாக கூட்டமாக தியேட்டர்களுக்கு ரசிகர்களின் வருகை இருக்கும், வசூலும் வாரி குவிக்கும் என்ற நம்பிக்கை தான்.
முதலில் சினிமா தியேட்டர்களில் இருந்த பெஸ்டிவல்ஸ் பிலிம்ஸ் என்ற கான்செப்ட் இப்போது சின்னத்திரைகளில் பார்மூலாவாகி விட்டது. நிறைய சூப்பர் ஹிட் படங்களை யார் வாங்கி, தீபாவளி பொங்கல் புத்தாண்டு காலகட்டத்தில் வெளியிடுவது என்பதில் கடும் போட்டியே நிலவுகிறது.
அந்த வகையில் வரும் ஏப்ரல் 14ம் தேதி, தமிழ் புத்தாண்டு தினத்தன்று, முன்னணி டிவி சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படும் புதிய படங்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது. அந்த வகையில், தியேட்டர்களில் சமீபத்தில் வெளியான முக்கிய நடிகர்களின் படங்கள்தான் இடம்பிடித்து இருக்கின்றன.
வரும் 14ம் தேதி மதியம் 1 மணிக்கு, ஜீ தமிழ் தொலைக்காட்சியில், நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படம் திரையிடப்படுகிறது. இதே டிவியில் காலை 9.30 மணிக்கு, நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி என்ற படம் திரையிடப்படுகிறது.
கலர்ஸ் தொலைக்காட்சியில் மதியம் 2 மணிக்கு வசந்த் ரவி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி நடித்த பொன் ஒன்று கண்டேன் என்ற படம் ரிலீசாகிறது. இந்த படம் தியேட்டருக்கு வராமல், நேரடியாக டிவியில் ரிலீசாவது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் மாமன்னன், சன் டிவியில் அயலான் ஆகிய படங்களும் திரையிடப்படுகின்றன. புத்தாண்டு தினத்தன்று இப்படி சமீபத்தில் வெளியான புதுப்படங்களை குடும்பத்துடன் பார்ப்பதும் ரசிகர்களுக்கு ஒரு தனி உற்சாகம்தான்.





