சென்னை தி நகர் போக் ரோட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்து மறைந்த அவரது சொந்த வீடு அன்னை இல்லம் உள்ளது. இப்போதைய மார்க்கெட் நிலவரப்படி அந்த வீட்டின் மதிப்பு ரூ. 150 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வீட்டில் நடிகர் சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார் மற்றும் நடிகர் பிரபு மற்றும் அவர்களது மகன்கள் மகள்கள் பேரன் பேத்திகள் உள்ளிட்டோர் தங்களது குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் துஷ்யந்த், ஜெகஜால கில்லாடி என்ற படத்தை தயாரிக்க, தனலட்சுமி என்டர்பிரைசஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்திடம் வாங்கிய கடன் ரூ. 3.75 கோடி, வட்டியுடன் ரூ. 9 கோடிக்கு மேல் ஆன நிலையில் அவர் கடனை திருப்பித் தரவில்லை.
இதுகுறித்து அந்த தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பித் தராததால் சிவாஜி கணேசன் வாழ்ந்த வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து அந்த வீடு எனக்கு சொந்தமில்லை. என் தம்பி நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என ராம்குமார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
மேலும் இந்த வழக்கில் நடிகர் பிரபுவும் மனுதாக்கல் செய்தார். அதில் அன்னை இல்லம் வீடு எனக்கு மட்டுமே சொந்தமானது. என் அண்ணனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இந்த வீட்டில் எந்த உரிமையும் இல்லை. அதனால் அன்னை இல்லம் ஜப்தி உத்தரவை கோர்ட் ரத்து செய்ய வேண்டும். மேலும் என் அண்ணன் ராம்குமார் பலரிடம் கடன் வாங்கி இருக்கிறார். அதனால் என்னால் ராம்குமாருக்கு உதவ முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து பிறப்பித்த உத்தரவில், தனது அப்பா நடிகர் சிவாஜி கணேசன் வீட்டின் மீது தனக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் எதிர்காலத்திலும் எந்த விதமான உரிமையும் கோர மாட்டேன் எனவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாருக்கு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நடிகர் பிரபுவை பொருத்த வரை சினிமாவில் தொடர்ந்து தனக்கு ஏற்ற கேரக்டரில் நடித்து வருகிறார். விளம்பர படங்களில் அதிகமாக நடிக்கிறார். அவரது மகன் விக்ரம் பிரபுவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஆனால் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் மற்றும் அவரது மகன் துஷ்யந்த் போன்றவர்களால் இன்று சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்யும் அளவுக்கு மோசமாகி விட்டது என்பது, நடிகர் திலகத்தின் ரசிகர்களை வேதனையில் தள்ளியுள்ளது.





